Published : 01 Nov 2023 05:50 PM
Last Updated : 01 Nov 2023 05:50 PM
நாகர்கர்னூல் (தெலங்கானா): தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 2 சதவீத வாக்குகளையே பெறும் என்றும், இங்கு பாரத் ராஷ்ட்ர சமிதிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தெலங்கானாவின் நாகர்கர்னூலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியது: "இந்தத் தேர்தல் என்பது முதல்வராக இருக்கும் கே.சந்திரசேகர ராவுக்கு விடை கொடுக்கும் தேர்தல். முதலில் அவரை வழியனுப்ப வேண்டும். அதன்பிறகு, தெலங்கானா மக்களிடம் இருந்து அவர் அடித்த கொள்ளை குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். மக்களிடம் இருந்து அவர் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியைப் போன்று நான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுக்கும் நபர் அல்ல. நான் ஒரு வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவேன்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை ஒரு பக்கம் சந்திரசேகர ராவ், அவரது குடும்பம், அவரது ஊழல் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறுபக்கம், தெலங்கானாவின் ஏழைகள், விவசாயிகள், காங்கிரஸ் கட்சி ஆகியவை இருக்கின்றன. நமது கனவு, தெலங்கானாவை இம்மாநில மக்கள் ஆள வேண்டும் என்பதுதான். ஆனால், தற்போது ஒரு மன்னரும், அவரது குடும்பமும்தான் தெலங்கானாவை ஆள்கிறது.
இந்த தேர்தல் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயானது. உண்மை என்னவென்றால், பாரத் ராஷ்ட்ர சமிதியோடு பாஜகவும், ஒவைசி கட்சியும் ஒன்று சேர்ந்துள்ளது. பாஜகவைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவுவது வாடிக்கை. எனக்கு எதிராக 24 வழக்குகள் உள்ளன. மக்களவையில் இருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரபூர்வ அரசு இல்லம் என்னிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. நானும் மகிழ்ச்சியோடு அதனை கொடுத்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இந்தியாவும், தெலங்கானாவுமே எனது இல்லம்தான். பாஜகவைப் பொறுத்தவரை அவர்களுக்கு யார் எதிரியோ அவர்களைத்தான் குறிவைப்பார்கள். ஆனால், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மீது எந்த வழக்கையும் அவர்கள் தொடுக்கவில்லை. ஏனெனில், பிரதமர் மோடியும், சந்திரசேகரராவும் இணைந்து செயல்படுகிறார்கள்.
இத்தகைய சூழலில், இங்கு வரும் பாஜக தலைவர்கள், பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட ஒருவர்தான் முதல்வராக வருவார் என்கிறார்கள். அவர்கள் இங்கே 2 சதவீத ஓட்டுக்களைத்தான் பெறுவார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களால் எவ்வாறு இங்கே ஆட்சி அமைக்க முடியும்? மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், உத்தரப் பிரதேசம் என எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் ஒவைசியின் கட்சி வந்துவிடும். அவர்கள், பாஜகவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இதை தெலங்கானா மக்கள் மனதில் கொள்ள வேண்டும்" என்று ராகுல் காந்தி உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT