Published : 01 Nov 2023 06:14 AM
Last Updated : 01 Nov 2023 06:14 AM
புதுடெல்லி: தாய்லாந்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை 20 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த நாட்டின் 7 கோடி மக்கள் தொகையில், சுமார் ஒரு கோடி பேர் சுற்றுலாவினால் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
சீனாவில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் சீனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. உக்ரைன் போர், இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாய்லாந்தின் சுற்றுலா துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. இதுதொடர்பாக தாய்லாந்து சுற்றுலா துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு மே 10-ம் தேதி வரை தாய்லாந்தில் பயணம் மேற்கொள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. தாய்லாந்து வரும் இந்தியர்கள் 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கியிருக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 2.1 கோடி இந்தியர்கள் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிரிட்டன், கத்தார், குவைத், கனடா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT