Published : 02 Jan 2018 01:24 PM
Last Updated : 02 Jan 2018 01:24 PM
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இன்று அதிகாலை, ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அதிரடிப் படையினர் மீது செம்மரக் கடத்தல் கும்பல் கற்களாலும் கத்தியாலும் தாக்குதல் நடத்தியது. இதில் போலீஸ் படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். இதனால் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 32 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் அதிகாலை அதிரடிப்படையினர் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீவாரி மெட்டு பகுதியில், தேவுன்னி குடி என்கிற இடத்தில், சுமார் 60க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கும்பல், செம்மரங்களை வெட்டி, அதனைக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த அதிரடிப் படையினர், மரங்களை போட்டுவிட்டு சரண் அடையும் படி எச்சரித்துள்ளனர்.
ஆனால், சரண் அடையாமல், தங்களிடம் இருந்த கத்தி, கோடாரி மற்றும் கற்களால் அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹரிகிருஷ்ணா எனும் போலீஸ் கான்ஸ்டபிள் காயமடைந்தார். இதனால் வானத்தை நோக்கி 2 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியதால் செம்மரங்களைப் போட்டு விட்டு செம்மரக் கடத்தல் கும்பல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டது.
பின்னர் அங்கிருந்த 32 செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்து, தப்பியோடிய கும்பலை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படை ஐஜி காந்தாராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நெல்லூர்மாவட்டத்தில்
1.5 கோடிசெம்மரம்பறிமுதல்
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை ராவூரு, உதயகிரி, சோமசீலா ஆகிய பகுதிகளில் போலீஸாரும், அதிரடிப்படையினரும் தீவிர வாகன சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 554 கிலோ எடையுள்ள 33 செம்மரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1.5 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு, 3 வாகனங்கள், 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT