Published : 31 Oct 2023 04:08 PM
Last Updated : 31 Oct 2023 04:08 PM

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட் - குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷணவ் | கோப்புப் படம்

புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களில் ‘அத்துமீறி ஊடுருவல்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கைத் தகவலை அனுப்பிய நிலையில், ‘ஹேக்கிங்’ குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களின் ‘ஹேக்கிங்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. தங்களின் செல்போன் மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை மத்திய அரசு உளவு பார்ப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்களும், எம்.பி.க்களும் தங்களின் எக்ஸ் வலைதள பக்கங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

மொபைலில் இருக்கும் தகவல்களை ‘ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்’ (State Sponsored attackers) திருட முயற்சிப்பதாக எம்.பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் பவான் கேரா, சசி தரூர் உள்ளிட்டோருக்கு ஆப்பிள் நிறுவனம் வார்னிங் மெசேஜ் அனுப்பியிருக்கிறது. இதை தங்களின் எக்ஸ் வலைதளத்தில் அவர்கள் பகிர்ந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் செல்போன் ஹேக் செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாஜகவினர் இளைஞர்களின் கவனத்தை திசைத் திருப்ப முயற்சிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ ஒட்டுக்கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை. வேண்டுமென்றால் என் போனையே தருகிறேன். செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயலல்ல. குற்றவாளிகளும், திருடர்களும் செய்யும் செயல்.

வழக்கமாக மோடி, அமித் ஷாவை தான் நம்பர் ஒன், நம்பர் 2 என்று கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே நம்பர் ஒன் ஆக இருப்பவர் அதானிதான். அதானிக்காகவே மோடியும், அமித் ஷாவும் வேலை செய்கிறார்கள். பிரச்சினைகளை திசைத் திருப்பவே மத்திய அரசு இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறது” என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, "இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அக்கறை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, ஆப்பிள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. சுமார் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. நாடு முன்னேறுவதைக் காண விரும்பாத மக்கள் இதுபோன்ற அரசியலில் ஈடுபடுகின்றனர்" என்றார்.

— Shashi Tharoor (@ShashiTharoor) October 31, 2023

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாக 2019-ல் எழுந்த சர்ச்சை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x