Published : 31 Oct 2023 07:56 AM
Last Updated : 31 Oct 2023 07:56 AM

ஆந்திரா ரயில் விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

கோப்புப்படம்

விஜயநகரம்: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, பலாசா ரயில் சிக்னல் கிடைக்காததால் மிகவும் நிதானமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த ராயகடா - விசாகப்பட்டினம் பயணிகள் ரயில், பலாசா ரயில் மீது வேகமாக மோதியது.

இதைத் தொடர்ந்து, எதிரே 2 டிராக் தள்ளி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பலாசா ரயில் பெட்டி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு ரயிலும் சேதம் அடைந்தது. ராயகடா ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இரவில் நடந்த இந்த கோர விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 52 பேர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதிக்கு, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விஜயநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. இரவு முழுவதும் மீட்பு பணிகளும், சீரமைப்பு பணிகளும் ஒருசேர போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன.

நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்று, 3 மணிக்கு சோதனை அடிப்படையில் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன் பின்னர் 4 மணி முதல் இந்த தடத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்தது.

இந்த ரயில் விபத்தில் பல சோகங்கள் அரங்கேறியுள்ளன. விபத்தில் திருமணமாகி 6 மாதங்களே ஆன மணமகன் உயிரிழந்துள்ளார். சதீஷ் (29) என்பவருக்கு திருமணமாகி வெறும் 6 மாதங்களே ஆகியுள்ளன. விசாகப்பட்டினத்தில் மார்க்கெட்டிங் துறையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவரை, இவரது தாயார்தான் ஆசையுடன் வளர்த்து ஆளாக்கினார்.

இவருக்கு சிறு வயது முதலே மிகவும் அழகாக உடை உடுத்தி கொள்வது பிடிக்குமாம். இவருக்கு சமீபத்தில் தான் திருமணமானது. இந்நிலையில், சதீஷ் தனது சொந்த ஊரான விஜயநகரத்திற்கு கோயில் திருவிழாவுக்காக சென்று, ஞாயிறன்று இரவு கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் ஊர் திரும்புவதாக இருந்தது. ஆனால், முன்னதாகவே இவர் ரயில் நிலையத்திற்கு வந்து விட்டதால், ராயகடா - விசாகப்பட்டினம் ரயிலில் ஏறினார். சீக்கிரமாக ஊர் போய் சேர்ந்து விடலாம் என ரயிலேறியவர், உயிரிழந்துவிட்டார் என்பதுதான் சோகம்.

இதேபோல், விஜயநகரம் கொடிமொம்மூரு கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் கே.ரவி (35) சில பொருட்களை வாங்க விபத்து நடக்க வெறும் 5 நிமிடங்கள் முன்புதான், ரயில் நிலையத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ஓடி சென்று பயணிகள் ரயிலில் ஏறி உள்ளார். அவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மனைவி கல்யாணி, 2 குழந்தைகள் உள்ளனர். இதுபோன்ற பல சோக சம்பவங்கள் இந்த ஆந்திர ரயில் விபத்தில் அரங்கேறியுள்ளன.

ஹெலிகாப்டர் மூலம் நேற்று பிற்பகல் விஜயநகரம் வந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே, நேற்று காலை விஜயநகரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவோரை ஆந்திர அமைச்சர் சத்தியநாராயணா நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆந்திர அரசு கண்டிப்பாக உதவி செய்யும். இறந்தவர்களின் உடல்கள், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடனுக்குடன் அவரவர் உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவி தொகை வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் பி. சத்திய நாராயணா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x