Published : 30 Oct 2023 03:16 PM
Last Updated : 30 Oct 2023 03:16 PM
புதுடெல்லி: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிற சிவசேனா எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அணி, துணை முதல்வர் அஜித் பவார் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராக தாக்கல் செய்யதுள்ள தகுதி நீங்க மனுக்கள் மீது 2024 ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும், மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அரசியல் அமைப்பின் பத்தாவது அட்டவணை (விலகலைத் தடுத்தல்) குறித்து கவனத்தை ஈர்த்து, "நாங்கள் கவலைப்படுகிறோம். பத்தாவது அட்டவணையின் மாண்பு காப்பாற்றப்பட வேண்டும். நடைமுறைச் சண்டைகள் காரணமாக மனுக்களைத் தாமதப்படுத்த முடியாது. டிசம்பர் 31-ம் தேதி நடைமுறைகளை முடித்துவிட்டு நாங்கள் உத்தரவுகளைப் பிறப்பிப்போம்" என்று தெரிவித்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்த மனுக்கள் மீது முடிவு எடுப்பதற்கான நியாயமான காலக்கெடுவை நிர்ணயிக்கும்படி ராகுல் நார்வேகருக்கு இறுதி அவகாசம் வழங்கி இருந்த உச்ச நீதிமன்றம் விரைவாக செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது.
முன்னதாக, செப்.18ம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது, மே 11 உத்தரவுக்கு மரியாதை அளிக்குமாறு கூறிய உச்ச நீதிமன்றம், சிவசேனா எம்எல்ஏக்களின் தகுதி நீக்க விவகாரத்தில் நியாயமான நேரத்துக்குள் முடிவெடுக்க வலியுறுத்தியிருந்தது. அப்போது, சபாநாயரிடம் மே 11-ம் தேதி தகுதி நீக்க வழக்கில் நியாயமான காலத்துக்குள் முடிவெடுக்க கூறியதாகவும், அதன் பின்னர் ஜூலையில் எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: மகாராஷ்டிராவில் 2019-ல் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன், சிவசேனா மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். இந்த கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டு நீடித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு சிவசேனா கட்சி 2-ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) கூட்டணி ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. மேலும் கட்சியின் அம்பு சின்னம், சிவசேனாவின் பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது.
முன்னதாக, ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடாவாக இருந்த எம்எல்ஏ சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் கடிதம் வழங்கியிருந்தார். அதேபோல் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...