Published : 29 Oct 2023 04:37 PM
Last Updated : 29 Oct 2023 04:37 PM

கேரள குண்டுவெடிப்பு |  நாளை காலை அனைத்துக்கட்சி கூட்டம் - முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து (நாளை) திங்கள்கிழமை அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு மாநில முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் நாளை காலை 10 மணிக்கு மாநில சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் கருத்தரங்கு அறையில் நடைபெறும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாாரக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த விபத்து குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். இது தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் குவிந்துள்ளனர். சம்பவம் குறித்து டிஜிபியிடம் பேசியிருக்கிறேன். விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வரும்” என்று தெரிவித்தார். இந்தநிலையில் நாளை கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக டெல்லியில் இருந்த முதல்வர் இன்று கேரளா திரும்புகிறார்.

ஆளுநர் இரங்கல்: இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து மாநில முதல்வர் ஆரிஃப் முகம்மது கான் கூறுகையில், "களமசேரியில் மத வழிபாட்டுக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் இறந்து, 20க்கும் அதிகமானோர் காயமடைந்தது குறித்து கேள்விப்பட்டதும் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் முரளிதரன்: இச்சம்பவம் குறித்து மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் கூறுகையில், "கொச்சிக்கு அருகே களமசேரியில் கிறிஸ்தவ மத கூட்டம் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம். பயங்கரவாத செயல்களான இதுபோன்ற செயல்கள் நடக்கும் இடமாக கேரளா மாறிவருவது கவலை அளிக்கிறது. உள்துறை அமைச்சர் ஏற்கனவே மாநில முதல்வரிடம் பேசியிருக்கிறார். நானும் பேசியிருக்கிறேன். மத்திய புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே தங்களின் விசாரணையைத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் இதனை தீவிரமாக ஆராய்ந்து இந்தச் சம்பவம் ஏன் யாரால் நிகழ்த்தப்பட்டது. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பார்கள் என நான் நம்புகிறேன். காயம்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் கிடைக்க செய்யுமாறு நான் மாநில அரசினை கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

கேரளா டிஜிபி டாக்டர் ஷேக் தர்வேஷ் சாகேப் கூறுகையில், "நான் சம்பவ இடத்துக்குச் சென்றதும் அதுகுறித்து விசாரிக்க இன்றே சிறப்பு குழுக்கள் உருவாக்கப்படும். சம்பம் குறித்த தனிப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

கேரளா அமைச்சர் வி.என்.வாசன் கூறுகையில், "இது ஒரு எதிர்பாரத சம்பவம், இச்சம்பவத்தில் பெண் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். குண்டுவெடிப்பினால் இல்லை. இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் காயமைடைந்த 36 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து விசாரணை அமைப்புகளும் முதற்கட்ட விசாரணையைத்த தொடங்கியுள்ளன" என்று தெரித்தார்.

இதனிடையே, கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "களமசேரியில் மதவழிபாட்டுக்கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த 52 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐசியுவில் உள்ள 18 பேரில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் 12 வயது சிறுமி. உயிரிழந்தவர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை" என்றார்.

இதனிடையே கேரள மாநிலம் களமச்சேரி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x