Published : 29 Oct 2023 11:59 AM
Last Updated : 29 Oct 2023 11:59 AM
கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஜெபக்கூட்டத்தில் வெடித்தது சாதாரண வெடிப் பொருட்களா அல்லது வெடிகுண்டுகளா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளை முடுக்கி விடுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். இது தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் குவிந்துள்ளனர். சம்பவம் குறித்து டிஜிபியிடம் பேசியிருக்கிறேன். விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் தெரிய வரும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment