Published : 28 Oct 2023 07:05 PM
Last Updated : 28 Oct 2023 07:05 PM
வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது குறித்து அடுத்த மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர பாண்டே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாகேந்திர பாண்டே கூறியது: "காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை நதியுடன் இணைக்கும் திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்ததை அடுத்து அதற்கான விழா கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக காசி விஸ்வநாதர் ஆலயத்தை விரிவுபடுத்தி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கோயிலும், கங்கை நதியும் தற்போது நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திருப்பதி, உஜ்ஜைனி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு இருப்பது போன்று இங்கும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளூர் மக்கள், பக்தர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து வந்துள்ளது. கிராமங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியமே எழவில்லை. மாநகரங்களில் இருந்து வரும் பக்தர்களில் சிலர் அணியும் ஆடைகள் காரணமாகவே, ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது சிக்கலான ஒரு விஷயம்.
ஆடைக் கட்டுப்பாடு விதிப்பதால் பக்தர்கள் வருந்தும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டியதை உணர்ந்தே இருக்கிறோம். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக தீர ஆலோசனை மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் கூட்டம் கூட உள்ளது. இதில், ஆடை கட்டுப்பாடு கொண்டு வரப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம். கருவறையில் தரிசனம் செய்யும்போது ஆண்கள் வேட்டி குர்தா அணிய வேண்டும் மற்றும் பெண்கள் புடவை உடுத்த வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து இதில் விவாதிக்கப்படும். மேலும், ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படும் கோயில்களில் உள்ள நடைமுறைகள் குறித்து ஆராயப்படும்" என்று காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர பாண்டே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...