Published : 28 Oct 2023 10:25 AM
Last Updated : 28 Oct 2023 10:25 AM

தொடர்ந்து உயரும் வெங்காய விலை | டெல்லியில் கிலோ ரூ.70; சென்னை கோயம்பேட்டில் ரூ.65-க்கு விற்பனை

புதுடெல்லி: தாக்காளி விலையுயர்வு வாட்டிவதைத்து ஓய்ந்த நிலையில் தற்போது வெங்காய விலை உயர்வு மக்களுக்கு பெரும் சிரமமாக வந்து சேர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று (அக்.28) காலை நிலவரப்படி மொத்த விற்பனையில் 5 கிலோ வெங்காயம் ரூ.350க்கு விற்பனையாகிறது.

டெல்லி காசிபூர் சந்தையைச் சேர்ந்த வெங்காய வியாபாரி ஒருவர் கூறுகையில், "வெங்காய வரத்து குறைந்துவிட்டது. அதனால்தான் விலை உயர்கிறது. நேற்று 5 கிலோ ரூ.300க்கு விற்றோம். இன்று ரூ.350க்கு விற்கிறோம். தொடர்ந்து வரத்து குறைவாக இருப்பதால் விலை ஏறி வருகிறது" என்றார்.

காசிபூர் சந்தைக்கு வந்த சில்லறை வியாபாரி ஒருவர் கூறுகையில், "மொத்தமாக இங்கிருந்து வெங்காயம் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்வோம். நவராத்திரிக்கு முன்னாள் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கு விற்றது. இன்று ரூ.70க்கு விற்கிறது நாங்கள் இதை கடைகளில் ரூ.80க்கு விற்பனை செய்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் கிலோ ரூ.100-ஐ எட்டும். தக்காளி விலையும் இப்போது ஏறத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி இன்று கிலோ ரூ.40 ஆக அதிகரித்துள்ளது" என்றார்.

சென்னை நிலவரம்: சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.65க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கோயம்பேட்டில் தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம், தக்காளி விலை மட்டுமல்லாது மற்ற காய்கறிகளின் விலையும் கடந்த 10 நாட்களை ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஏன் விலையேற்றம்? - அக்டோபரில் காரிப் பயிர் வெங்காயம் சந்தைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அது தாமதப்படுகிறது. ஜூன் - ஜூலை மாதங்களில் பருவமழை தொடங்கும்போது காரிப் பருவம் தொடங்குகிறது. இதனை பருவமழை விதைப்பு காலம் என்றும் அழைக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒருசில பகுதிகளில் இயல்பைவிட மிகமிகக் குறைவாகவும், சில இடங்களில் இயல்புக்கு மாறாகவும் பெய்துள்ளது. இதனால் காரிப் பருவ விதைத்தலும் தள்ளிப்போனதால் அந்தப் பருவத்தில் பயிராகி சந்தைக்கு வந்திருக்க வேண்டிய வெங்காயம் இன்னும் சந்தைக்கு வரவில்லை. அதேபோல், ஏற்கெனவே கையிருப்பில் உள்ள ராபி பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயமும் கரைந்து வரும் சூழலில் விலையேறுவதாக வெங்காய வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

சில்லறை விற்பனையில் வெங்காய விலை உயர்ந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தைக்கு விடுவித்து வருகிறது மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம். இருப்பினும் பண்டிகை கால நுகர்வு அதிகமாக இருப்பதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் விலை உயர்வு தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x