Published : 27 Oct 2023 05:06 PM
Last Updated : 27 Oct 2023 05:06 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் 5 தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார். இலவச லேப் டாப் தொடங்கி மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை வரை கவனிக்கத்தக்க அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 25-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் தேர்தலை ஒட்டி 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையில் இன்று (வெள்ளிக்கிழமை) கெலாட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்த 5 வாக்குறுதிகளை அறிவித்தார். ஏற்கெனவே அவர் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கு மானிய விலை வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வெகுமானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட பேரணியின்போது சிலிண்டர், ரூ.10 ஆயிரம் தொகைக்கான அறிவிப்பை கெலாட் வெளியிட்டிருந்தார். பெண்கள் மத்தியில் அந்த 2 அறிவிப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று மேலும் 5 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
5 வாக்குறுதிகள் என்னென்ன? - அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருதல், அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குதல், பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்துதல், மாநிலத்தில் ’கோ தன்’ திட்டம் மூலம் பசுஞ்சாணத்தை கிலோவுக்கு ரூ.2-க்கு வாங்கிக் கொள்ளுதல் மற்றும் இயற்கை பேரிடர் சேதங்களுக்கு ரூ.15 லட்சம் காப்பீடு அளித்தல் முதலான வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.
200 தொகுதிகள் போட்டாபோட்டியில் காங்கிரஸ் - பாஜக: ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் தற்போதைய முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கெலாட் சர்தார்புராவில் அவர் போட்டியிடுகிறார். அவருக்கு உட்கட்சியில் சில பல எதிர்ப்புகள் உள்ளன. கெலாட்டுக்கு எப்போதும் சவால்விடும் சச்சின் பைலட் டோங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதேபோல், பாஜக சார்பில் வசுந்தரா ராஜே மீண்டும் போட்டியிடுகிறார். இவர், ராஜஸ்தானில் பாஜக சார்பில் 2 முறை முதல்வராக பதவி வகித்தவர். அம்மாநில மக்களால் ‘மகாராணி’ என்று அழைக்கப்படும் அவர், அப்பகுதியின் ராஜ பரம்பரையான சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தானின் ஜோத்பூர் ராஜ குடும்பத்தின் மருமகளாக வந்த வசுந்தரா, அதன் மகாராணியாகவும் உள்ளார். இந்தச் சூழலில் காங்கிரஸும்- பாஜகவும் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நவம்பர் 25 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற, வாக்கு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT