Published : 27 Oct 2023 04:21 PM
Last Updated : 27 Oct 2023 04:21 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றம்சாட்டில் விசாரணைக்கு ஆஜராகும்படி மக்களவை நெறிமுறைக் குழு சம்மன் அனுப்பிய நிலையில், நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டு மஹுவா மொய்த்ரா பதில் அனுப்பியுள்ளார்.
அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு மக்களவை நெறிமுறைகள் குழு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனுக்கு கூடுதல் அவகாசம் கேட்டு திரிணமூல் எம்.பி மஹுவா பதில் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “நான் மேற்கு வங்க மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அங்கு துர்கா பூஜை மிகவும் பிரபலம். நான், எனது நாடாளுமன்ற தொகுதியில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 4-ம் தேதி வரை நடக்கும் பல்வேறு துர்கா பூஜை கூட்டங்களில் கலந்து கொள்வதாக ஏற்கெனவே ஒப்புக்கொண்டு விட்டேன். அக்டோபர் 31-ம் தேதி என்னால் டெல்லியில் இருக்க இயலாது. அதனால், நவம்பர் 5-ம் தேதிக்கு பின்னர் நெறிமுறைக் குழு விரும்பும் எந்தத் தேதியிலும் நேரில் ஆஜராக தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் தனிஷ் அலியை தகாத வார்த்தைகளில் பேசிய பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரிக்கு நாடாளுமன்ற உரிமை மீறல் குழு அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. அதற்கு ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்கள் காரணமாக அவரது வேண்டுகோளின் பெயரில் பின்னர் ஒரு தேதியில் ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டது என்று மஹுவா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிராநந்தானி ஆஜராக வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மேலும் தனது கடிதத்தில், ‘தொழிலதிபர் ஹிராநந்தனி நெறிமுறைக் குழு முன்பு கட்டாயமாக ஆஜராகி, தனக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்பட்ட பரிசு பொருள்கள், சலுகைகளின் விரிவான உறுதிசெய்யப்பட்ட பட்டியலை வழங்க வேண்டும். அவரது வாய்மொழி ஆதாரம் இல்லாத எந்த ஒரு விசாரணையும் முழுமையடையாது, பக்கச்சார்புடையது என்பதை நான் பதிவு செய்யவிரும்புகிறேன். எனவே, நெறிமுறைக் குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக ஹிராநந்தனியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், ஒரு எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் தனிப்பட்ட நேர்மையும், ஒழுக்கத்துக்கான குறிப்பிட்டத்தகுந்த சாதனைகள் எனக்குண்டு” என்றும் கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹுவா, "எனக்கு 31-ம் தேதி ஆஜராகும்படி அனுப்பப்பட்ட சம்மன் மாலை 7.20 மணிக்கு எனக்கு மின்னஞ்சலில் வருவதற்கு முன்பாக நெறிமுறைக் குழு தலைவர் ஒரு தொலைக்காட்சி நேரலை நிகழ்வில் அதை அறிவிக்கிறார். இந்த விவகாரத்தில் அனைத்து புகார்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. நவம்பர் 4-ம் தேதி வரை நான் ஏற்கெனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், அதற்கு பின்னர் குழு முன்பு ஆஜராகலாம் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பின்னணி: மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பியாக மஹுவா மொய்த்ரா உள்ளார். இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அண்மையில் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பிநிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார்அளித்தார். அவரது பரிந்துரையின்பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதன்படி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் நேற்று காலை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். குழுவின் தலைவர் வினோத் கே சோங்கர் இருவரிடமும் விசாரணை நடத்தி, முக்கிய ஆதாரங்களை பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மஹுவா மொய்த்ரா வரும் 31-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT