Published : 27 Oct 2023 02:59 PM
Last Updated : 27 Oct 2023 02:59 PM
பத்ரக் (ஒடிசா): ஆம்புலன்ஸை அழைக்க வசதி இல்லாததால், காயம்பட்ட தனது தந்தையை அவரது ட்ரை சைக்கிளில் வைத்து 35 கிலோ மீட்டர் தூரம் ஓட்டி வந்து மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளார், 14 வயது ஒடிசா சிறுமி ஒருவர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள நாடிகன் கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயதான சுஜாதா சேதி என்ற சிறுமி. இவர் அக்டோபர் 22-ம் தேதி கலவரம் ஒன்றில் காயமடைந்த தனது தந்தையை கிராமத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் மருத்துவமனைக்கு தந்தையின் மூன்று சக்கர சைக்கிளில் வைத்து அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சிறுமியின் தந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை உடனடியாக பத்ரக்கில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லும்படி கூறியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து காயமடைந்த தனது தந்தையை 35 கிலோ மீட்டர் தூரம் அதே மூன்று சக்கர சைக்கிளில் வைத்து ஓட்டிச்சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் சுஜாதாவிடம், ‘உங்கள் தந்தைக்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டும், இப்போது வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைத்து வர வேண்டும்’ என்று சொல்லியுள்ளனர்.
இது குறித்து சுஜாதா அளித்த பேட்டி ஒன்றில், “தனியார் வாகனம் அமர்த்தி தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வரும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. ஆம்புலன்ஸை அழைப்பதற்கு என்னிடம் மொபைல் போனும் இல்லை. அதனால், தந்தையின் மூன்று சக்கர சைக்கிளில் வைத்து அவரை நான் மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன்" என்றார். இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், பத்ரக் சட்டமன்ற உறுப்பினர் சஞ்ஜிப் மால்லிக் மற்றும் முன்னாள் தாம்நகர் எம்எல்ஏ ராஜேந்திர தாஸ் ஆகியோர் சம்மந்தப்பட்ட சிறுமியை அணுகி, அவருக்கு தேவையான உதவிகளைச் செய்தனர்.
இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி சாந்தனு பத்ரா கூறுகையில், "நோயாளி அக்டோபர் 23-ம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு வாரம் கழித்து அறுவைசிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எங்களிடம் நோயாளிகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்க ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. அவருக்கான சிகிச்சை முடியும் வரை அவர் மருத்துவமனையில் இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஒடிசாவில் கடந்த 23-ம் தேதி நடந்திருக்கிறது. என்றபோதிலும் அச்சிறுமி தனது தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் மொஹாதப் சாக் என்ற இடத்தில் சில உள்ளூர்வாசிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பார்த்து விசாரித்த பின்னர் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT