Published : 27 Oct 2023 06:50 AM
Last Updated : 27 Oct 2023 06:50 AM

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை குழுவினர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து வழங்கினர்.

நீண்டகால சட்ட போராட்டத்துக்குப்பின் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, அங்குகட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் ராமர் கோயில் கருவறையில் அடுத்தாண்டு ஜனவரி 22-ம் தேதி ராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்ய, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை குழுவினர் முடிவு செய்தனர்.

அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து, ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

நான் செய்த பாக்கியம்: இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், ‘‘இன்றைய நாள் உணர்வுபூர்வமானது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என்னை வீட்டில் வந்து சந்தித்து, அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது போல் உணர்கிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை நான் காண்பது, எனது வாழ்நாளில் நான் செய்த பாக்கியம்’’ என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அயோத்தி அறக்கட்டளை நிர்வாகிகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் வெளியிட்டு ராமபக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர் என ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x