Published : 27 Oct 2023 07:21 AM
Last Updated : 27 Oct 2023 07:21 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த 912 பரிசு பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்கலாம். இந்த பொருட்களுக்கு ரூ.100 முதல் ரூ.65 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் பரிசு பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்படுகின்றன. இதன் மூலம்பெறப்படும் தொகை கங்கை நதியை தூய்மை படுத்தும் நமாமி கங்கை திட்டத்துக்கு செல்கிறது.
தற்போது 5-வது சுற்றாக நடைபெறும் ஏலத்தில் 912 பரிசு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கான ஏலம் கடந்த அக்டோபர் 2-ம் தேதிதொடங்கி அக்டோபர் 31-ம் தேதிவரை தொடரும். இந்த பரிசு பொருட்கள் தற்போது டெல்லியில் நவீன கலை தேசிய அரங்கில் (என்ஜிஎம்ஏ) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் பகவான் லட்சுமி நாராயண் வித்தல் மற்றும் ருக்மினி தேவிசிலை, கன்றுடன் கூடிய காமதேனு, ஜெருசலேம் நினைவுப் பரிசு, ராமர்,சீதை, லட்சுமன், அனுமன் வெண்கல சிலைகள், ராம் தர்பார் சிலை, பொற்கோயில், மொதேரா சூரிய கோயில் மாதிரிகள் உட்பட பல பரிசுபொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் பகவான் லட்சுமி நாராயண், ருக்மினி தேவி, கன்றுடன் கூடிய காமதேனு, ஜெருசலேம் நினைவுப் பரிசு போன்றவற்றை அதிக பேர் ஏலத்தில் கேட்டுள்ளனர். இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 நினைவு பரிசுகளின் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பரிசு பொருட்களுக்கு ரூ.100 முதல் ரூ.65 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்ஜிஎம்ஏ அரங்கத்தில் பிரதமருக்கு கிடைத்த பரிசு பொருட்களை பார்வையற்றோர் தொட்டுப் பார்க்கவும், காது கேளாதோருக்கு செய்கை மொழியில் விளக்கம் அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் https://pmmementos.gov.in/#/ என்ற இணையதள முகவரியில் மின்னணு ஏலத்தில் பங்கேற்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT