Published : 26 Oct 2023 06:13 AM
Last Updated : 26 Oct 2023 06:13 AM

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ரூ.22,300 கோடி உர மானியத்துக்கு ஒப்புதல்

கோப்புப்படம்

புதுடெல்லி: ரூ.22,303 கோடி மதிப்பிலான உர மானியத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உரமானியத்துக்கு ரூ.1.75 லட்சம் கோடி கடந்த பிப்ரவரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ரபி பருவ கால விவசாய பணிகளை மேற்கொள்ள ரூ.22,303 கோடி மதிப்பில் உரமானியம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ரபி பருவமான குளிர்காலத்தில் கோதுமை, பருப்பு, திணைகள், காய்கறிகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விவசாயிகள் பயிரிடுவர். இது நாட்டின் உணவு தானிய விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு இருக்கும். இந்நிலையில் ரூ.22,303 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உரநிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விவசாயிகளுக்கு தள்ளுபடி விலையில் ஊரக பகுதியில் உள்ள இணைய சேவையுடன் கூடிய கடைகள் மூலம் விற்பனை செய்கின்றன. சந்தை விலைக்கும், தள்ளுபடி விலைக்கும் உள்ள வித்தியாச தொகையை உர நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்.

சர்வதேச சந்தையில் உரங்களின் விலைக்கேற்ப மானியம் மாறுபடும். ஆனால், இது விவசாயிகளுக்கு சுமையாக இல்லாத வகையில் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். உரங்களின் தேவைகளுக்கு இந்தியா இறக்குமதியை சார்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக 2022-23-ம் ஆண்டில் உரங்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்தன. இதனால் உரங்களின் மொத்த மானியத் தொகை கடந்தாண்டில் ரூ.2.56 லட்சம் கோடியாக உயர்ந்தது. தற்போது உரங்களின் விலை குறைந்துள்ளது.

ரபி பருவத்துக்கு உரங்களுக்கான புதிய மானிய விலைகள் நைட்ரஜன் கிலோவுக்கு ரூ.47.02ஆகவும், பாஸ்பரஸ் கிலோவுக்குரூ.20.82 ஆகவும், பொட்டாசியத் துக்கு ரூ.2.38ஆகவும், கந்தகம் கிலோவுக்கு ரூ.1.89 ஆகவும் இருக்கும்.

டை-அம்மோனியம் பாஸ்பேட் மூடை ஒன்று ரூ.1,350-க்கும் விற்கப்படும். நமது நாட்டில் கடந்தாண்டு 32.54 மில்லியன் டன் உரங்கள் பயன்படுத்தப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 10.8 சதவீதம் அதிகம் என இந்திய உர நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x