Published : 25 Oct 2023 06:33 PM
Last Updated : 25 Oct 2023 06:33 PM
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தலையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. 200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை அடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானில், ஜுன்ஜுனு நகரில் நடைபெற்ற கட்சி பேரணியில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும். 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500 என்ற விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்" என்றார். பேரணியில் முதல்வருடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.
காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகளை விமர்சித்திருக்கும் பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர், "தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறது. உண்மையில் பெண்கள் பயன்பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், இந்த அறிவிப்பை முன்பே வெளியிட்டிருக்க வேண்டும்" என்றார்.
ராஜஸ்தானில் 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல்வா் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் அதிகாரப் போட்டி நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT