Published : 30 Jan 2018 11:14 AM
Last Updated : 30 Jan 2018 11:14 AM

திருப்பதி வனப்பகுதியில் வெடிகுண்டு பொருட்கள்; நாசவேலைக்கு சதியா?- போலீஸ் விசாரணை

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு வெடிகுண்டு தயாரிப்புக்கான எலக்ட்ரானிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஸ்ரீவாரி மெட்டுப் பகுதி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளதால், நாச வேலைக்கு யாராவது சதி செய்திருக்கிறார்களா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை இரு நடைபாதைகள் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை என இரண்டு வழிகள் இருக்கின்றன. தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இந்த வழிகள் மூலமாக வருவோருக்கு ’திவ்ய தரிசன’ ஏற்பாடுகள் செய்து வருகிறது.

மேலும், இவ்வழிகளில் விஐபி பக்தர்களும் நேர்த்திக் கடன் செலுத்த நடந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திருப்பதி அதிரடிப்படையினர் ஸ்ரீவாரி மெட்டு பகுதிக்கருகே வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு புதரில் கேட்பாரற்று கிடந்த ஓரு பையைக் கண்டனர்.

பின்னர் அந்தப் பையை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில், வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் இருந்தன. உடனடியாக இது குறித்து அதிரடிப்படை ஐஜி காந்தாராவிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மர்ம நபர்கள் வெடி குண்டு தயாரிக்கத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை ஒரு பையில் ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். இவ்ற்றை எதற்காக இங்கு கொண்டு வந்தனர் எனவும், ஏதாவது நாசவேலை காரணமாக இருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இந்தப் பையில் திருச்சியைச் சேர்ந்த ஒரு முகவரி உள்ளது. இவற்றை திருமலை போலீஸாரிடம் நாங்கள் ஒப்படைக்கிறோம்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துவர். அப்போது இதன் உண்மைகள் வெளிவரும் என ஐஜி காந்தாராவ் கூறினார்.

இது தொடர்பாக திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சிக்கு போலீஸ் படை சென்றுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த 2003ம் ஆண்டு பிரம்மோற்ஸவத்திற்கு பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காரில் திருமலை சென்றபோது, அலிபிரி மலையடிவாராத்தில் குண்டு வெடித்தது.

இதில் நாயுடு உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில், மீண்டும் இதே சேஷாசலம் வனப்பகுதியில் வெடி குண்டு தயாரிக்க பயன் படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மீண்டும் ஏதாவது நாசவேலை நடக்குமோ என பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x