Published : 24 Oct 2023 09:00 PM
Last Updated : 24 Oct 2023 09:00 PM
புதுடெல்லி: அயோத்தியில் ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்குக் கோயில் கட்டப்படுவது நம் பொறுமைக்குக் கிடைத்த பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விஜய தசமியை ஒட்டி பிரதமர் மோடி டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று (அக்.24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராவண உருவ பொம்மை வத நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் விஜயதசமி மற்றும் நவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவானது தீமையை நன்மை வெற்றி காண்பதைக் குறிக்கிறது. நிலவுக்கு சந்திரயானை அனுப்பிய இரண்டு மாதங்களில் நாம் இந்த விஜய தசமியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்திய கலாச்சாரத்தின்படி இந்த நன்நாளில் ஆயுதங்களுக்கு பூஜை செய்யப்படுகிறது. ஆனால், அந்நிய மண்ணை ஆக்கிரமிப்பதற்கு பயன்படுத்துவதற்காக அல்ல சொந்த மண்ணை காப்பாற்றப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆயுத பூஜை செய்யப்படுகிறது. அதேபோல் நாம் மேற்கொள்ளும் சக்தி பூஜை நம் நலனுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நலனுக்குமானது.
நீண்ட கால காத்திருப்புக்குப் பின்னர் தற்போது ராமர் கோயில் கட்டப்படுவதை நாம் காண்கிறோம். அது நாம் நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்த பொறுமைக்குக் கிடைத்த வெற்றி. ராம ஜென்ம பூமியில் ராமர் எழுந்தருள்வதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன.
இன்று ராவண உருவ பொம்மையை எரிக்கவுள்ளோம். இந்த நன்நாளில் நாம் அத்துடன் சேர்த்து மதவாதம், பிராந்தியவாதத்தால் தேசத்தைப் பிரித்தாளும் சக்திகளையும் எரிக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் ஒவ்வொரு சக்தியும் அழிக்கப்பட வேண்டும். நமக்கு கீதையின் நல்லறிவும் இருக்கிறது, ஐஎன்எஸ் தேஜஸ், விக்ராந்தை உருவாக்கும் அறிவியல் அறிவும் இருக்கின்றது" என்றார்.
முன்னதாக டெல்லி செங்கோட்டை மைதானத்தில் ராவண வத நிகழ்ச்சிக்காக வைக்கப்படிருந்த உருவ பொம்மைகளில் சிலவற்றில் 'சனாதன தர்ம விமர்சகர்கள்' என்று எழுதப்பட்டிருந்தது சர்ச்சைக்குள்ளானது. பின்னர் அவற்றிலிருந்து அந்த வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT