Published : 24 Oct 2023 03:17 PM
Last Updated : 24 Oct 2023 03:17 PM

அருணாச்சலப் பிரதேச எல்லையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் | கோப்புப் படம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேச எல்லையில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள வீரர்களுடன் இணைந்து தசரா பண்டிகையைக் கொண்டாடினார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டு, அங்குள்ள ஆயுதப்படைகளின் தயார்நிலை குறித்து நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டார். ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய பாதுகாப்பு அமைச்சர், அவர்களுடன் தசரா கொண்டாடினார். அப்போது அவர் பேசியதாவது: கடினமான சூழ்நிலைகளில் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நமது வீரர்கள், தேசமும் அதன் மக்களும் பாதுகாப்பாக இருப்பதை எப்போதும் உறுதி செய்து வருகின்றனர். அவர்களின் தளராத மனப்பான்மை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஈடு இணையற்ற தைரியம் ஆகியவற்றுக்காக நாடு நன்றி கூறுகிறது. ஒட்டுமொத்த தேசமும் ஆயுதப்படைகள் பற்றி பெருமிதம் கொள்கிறது, அவர்களுடன் துணை நிற்கிறது.

தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது தசரா. துணிச்சலான ஆயுதப்படை வீரர்களின் நீதி மற்றும் தர்மம் விஜயதசமி பண்டிகையின் நெறிமுறைகளுக்கு வாழும் சான்றாக உள்ளது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்ததற்கும், அது இப்போது மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கும் ஆயுதப்படைகளின் வீரமும் அர்ப்பணிப்பும் ஒரு முக்கிய காரணம். அண்மையில் நான் இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அங்கு நாயக் யஷ்வந்த் காட்கே மற்றும் போராடிய பிற இந்திய வீரர்களின் பங்களிப்பை கவுரவிப்பதற்காக கட்டப்பட்டுள்ள மன்டோன் நினைவிடத்திற்கு (பெருஜியா மாகாணம்) பயணம் செய்தேன். இரண்டாம் உலகப் போரில் மன்டோனை விடுவிப்பதற்கான இத்தாலி நடவடிக்கைக்காக இந்தியர்கள் மட்டுமல்ல, இத்தாலி மக்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்கள். இந்திய வீரர்களின் துணிச்சல் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம் இது.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்பு இயந்திரத்தை வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. பாதுகாப்பு சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து நாட்டின் ராணுவ வலிமையை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், பாதுகாப்புத் துறையில் 'தற்சார்பு இந்தியாவை' நோக்கி மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பெல்லாம் ராணுவத்தை மேம்படுத்த இறக்குமதியை நம்பியிருந்தோம். ஆனால் இன்று, பல முக்கிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் நாட்டிற்குள் தயாரிக்கப்படுகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளவும், இந்தியாவில் சாதனங்களை உற்பத்தி செய்யவும் உள்நாட்டுத் தொழில்துறையுடன் இணைந்து செயல்படவும் ஊக்குவிக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டில், பாதுகாப்பு ஏற்றுமதியின் மதிப்பு சுமார் ரூ.1,000 கோடியாக இருந்தது, ஆனால் இன்று நாம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறோம். இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x