Published : 24 Oct 2023 11:22 AM
Last Updated : 24 Oct 2023 11:22 AM

நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாட்டம் - பிரதமர் மோடி வாழ்த்து

திருநெல்வேலியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக தனது குழந்தைகளை அழைத்துச் சென்ற தந்தை

புதுடெல்லி: நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, கல்வி நிலையங்களில் வித்யாரம்பம் எனும் கல்வியை தொடங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்.கே.ஜி., யூ.கே.ஜி., முதலாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோயில்களில் வைத்து குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விஜயதசமியை ஒட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள். தீயவை ஒழியவும், நன்மைகள் பெருகவுமான நாளாக இந்த புனித நாள் அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

விஜயதசமியை முன்னிட்டு கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூர், குழந்தைகளுக்கு முதல்முதலாக கல்வியை அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெரியவர்களின் கடமை. சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம் என 3 மொழிகளில் குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவோம். ஓம் ஹரி ஸ்ரீ என குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுத்தோம் என தெரிவித்தார்.

நவராத்திரியின் கடைசி நாளான இன்று நாட்டின் பல பகுதிகளிலும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில்தான் ராமர், ராவணன வதம் செய்தார் என்பதால், அதை சித்தரிக்கும் திருவிழாக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. திபாவளி பண்டிகையின் தொடக்கமாக நவராத்திரி விழா அமைந்துள்ளது. ஒளி திருவிழாவான தீபாவளி இன்னும் 20 நாட்களில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x