Published : 24 Oct 2023 01:31 AM
Last Updated : 24 Oct 2023 01:31 AM
விஜயவாடா: தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கட்சி இடையிலான கூட்டணிதான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எனும் பூச்சியை அழிக்கும் மருந்து என நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலை தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கட்சி இணைந்தே சந்திப்பது என முடிவு செய்துள்ளன. ராஜமகேந்திரவரத்தில் பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு தேசம் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் இணைந்து பங்கேற்ற முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் இது உறுதி செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு கைதானதை அடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்தன.
“2024 மாநில தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் நலனை உறுதி செய்வதே எங்கள் கூட்டணியின் நோக்கமாக உள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அனுபவம் வாய்ந்த தலைவர் வேண்டும். நாங்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அல்லது முதல் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆட்சியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அட்டூழியங்கள், பொய் வழக்குகள், சாமானிய மக்களை அச்சுறுத்துதல், வளங்களை கொள்ளை அடிப்பது மற்றும் மதுபானக் கொள்கைகளை எதிர்க்கிறோம்.
எந்தவொரு கட்சியையும், அதன் தொண்டரையும் விட்டு வைக்காமல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது. இடதுசாரி, பாஜக என அனைத்தும் இதில் அடங்கும். அரசின் கொள்கைகளை மாற்றி இருந்தால் அது தேவை இருந்திருக்காது. அடுத்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தேர்தல் யுக்திகளை வகுக்க உள்ளோம். அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கூட்டணிதான் ஒய்எஸ்ஆர் காங். எனும் பூச்சியை அழிக்கும் மருந்து” என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT