Published : 23 Oct 2023 05:08 AM
Last Updated : 23 Oct 2023 05:08 AM

மஹுவா மொய்த்ரா எம்.பி. மீதான குற்றச்சாட்டு குறித்து கட்சி முடிவெடுக்கும்: திரிணமூல் கட்சி தலைவர் தகவல்

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.மஹுவா மொய்த்ரா அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற குழு தனது விசாரணை மேற்கொண்ட பிறகு, திரிணமூல் தலைமை பொருத்தமான முடிவை எடுக்கும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெர்ரக் ஓ பிரைன் நேற்று தெரிவித்துள்ளார்.

கேள்வி கேட்க லஞ்சம்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே சில தினங்களுக்கு முன்பு குற்றசாட்டு முன்வைத்தார். மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்டுள்ள 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை என்றும் அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்ப அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, விளக்கம் அளித்த தர்ஷன் ஹிராநந்தானி மஹூவா மொய்த்ராவுக்கு லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், மஹுவா மொய்த்ரா அவரது நாடாளுமன்ற கணக்கையும் அதன் கடவுச் சொல்லையும் தன்னிடம் கொடுத்தார் என்றும் அதன் மூலம் தேவைப்படும்போது மஹூவா சார்பாக தான் கேள்விகளை எழுப்பியதாகவும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி தெரிவித்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக திரிணமூல் கட்சியின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அக்கட்சியின் தலைவர் டெர்ரக் ஓ பிரைன் பதிலளித்துள்ளார். “இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மஹுவா மொய்த்ராவிடம் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டது.

அவரும் தன் விளக்கத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தட்டும். அதன் பிறகு கட்சி தன் முடிவை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x