Published : 23 Oct 2023 05:19 AM
Last Updated : 23 Oct 2023 05:19 AM

இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற உதவ வேண்டும்: மாணவர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற மாணவச் செல்வங்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலத்துக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி சென்றார். குவாலியர் நகரில் உள்ள சிந்தியா பள்ளியின்125-வது நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: குவாலியர் எனக்கு மிகவும் பிடித்தமான நகரம். அந்த நகருக்கு வரும்போது நான் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மாதவராவ் சிந்தியாவின் குடும்பம் நமது நாட்டுக்கு பெரும் பங்காற்றியுள்ளது. நமது நாட்டின் இளைஞர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது பாரத நாடு நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. குவாலியர் நகரில் உள்ள மாணவர்களுக்கு முழுமையான கல்வியை சிந்தியா பள்ளி வழங்கி வருகிறது.

நாம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. நமது நாடு வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்ற மாணவர்கள் உதவ வேண்டும். இதற்கான முயற்சியில் மாணவச் செல்வங்கள் ஈடுபடவேண்டும். தரமான கல்வி பயிலும் மாணவர்கள் நமது நாட்டின் எதிர்காலச் செல்வங்கள் என்பதை அனைவரும் அறிவர். நாட்டின் நலனை மனதில்நிறுத்தி பயிலும் அவர்கள் நாடுவளம் பெற வளமான வழியைக் காட்டுவார்கள்.இளைஞர்கள் மீதும், அவர்களது செயல்திறன்கள் மீதும் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளமான நாடாகவும், வளர்ச்சி பெற்ற நாடாகவும் மாற தீர்மானம் செய்துள்ளோம்.

நமது நாடு எடுத்துள்ள தீர்மானத்தை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவைப் போலவே மாணவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சிந்தியா பள்ளியின் ஒவ்வொரு மாணவரும் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

எனவே, மாணவச் செல்வங்கள் இன்று முதல் ஒரு தீர்மானத்தை மனதில் கொண்டு அதை நோக்கி செயல்படவேண்டும். எடுத்த காரியத்தை முடிப்போம் என்ற மன உறுதியுடன் மாணவர்கள் நடக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x