Published : 03 Jan 2018 10:22 AM
Last Updated : 03 Jan 2018 10:22 AM

ரூ. 500-லிருந்து ரூ.5,000 ஆகிறது: ஏழுமலையான் தரிசனத்துக்கு விஐபி பிரேக் கட்டணம் உயர்கிறது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் சுவாமியை தரிசிப்பதற்கான கட்டணம் விரைவில் பன்மடங்கு உயர உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை சாமானிய பக்தர்கள், தர்ம தரிசனம் வழியாகவும், மலையேறி திவ்ய தரிசனம் மூலமாகவும் தரிசித்து வருகின்றனர். ஆனால், விஐபி பக்தர்கள் சிபாரிசு கடிதங்கள் மூலமாக நேரடியாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 500 கட்டணம் செலுத்தி ஏழுமலையானை அதிகாலை 5.30 மணி முதல் 9 மணிக்குள் தரிசனம் செய்து வருகிறனர். இந்த விஐபி தரிசனத்தையும் தேவஸ்தானம் 3 பிரிவுகளாக பிரித்து உள்ளது. லிஸ்ட்-1, லிஸ்ட்-2, லிஸ்ட்-3 என இந்த 3 பிரிவினருக்கும் அவர்களின் தகுதிகளுக்கேற்ப தேவஸ்தானம் தரிசன ஏற்பாடுகள் செய்து வருகிறது.

இதில் லிஸ்ட்-1 என்பது மிகவும் பிரசித்தி பெற்ற விஐபிக்களுக்கும், அல்லது அவர்களது சிபாரிசு கடிதம் கொண்டு வருவோருக்கும் இந்த வசதி செய்து கொடுக்கப்படுகிறது. இதன் மூலம், சுவாமியை மிகவும் அருகில் தரிசனம் செய்யலாம். அவர்களுக்கு தனியாக ஹாரத்தி காண்பிக்கப்படும்.

அடுத்ததாக, லிஸ்ட்-2, லிஸ்ட்-3 என்கிற விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமியை வெகு அருகில் மட்டுமே தரிசனம் செய்ய இயலும். இவர்களுக்கு தனியாக ஹாரத்தி வழங்கப்படுவதில்லை. தற்போது, இந்த தரிசனத்துக்கான கட்டணங்களை பன்மடங்கு உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார்.

அதன்படி, லிஸ்ட்-1 டிக்கெட் ஒருவருக்கு ரூ. 500-லிருந்து ரூ.5,000, லிஸ்ட்-2 டிக்கெட் ஒருவருக்கு ரூ. 2,000, லிஸ்ட்-3 ஒருவருக்கு ரூ. 500 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் கூறப்படுகிறது.

சமீபத்தில், சிபாரிசு கடிதம் மூலம் கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்களுக்கு லட்டின் கட்டணத்தை தேவஸ்தானம் உயர்த்தியது. அதன்படி சாதாரண லட்டு ரூ. 25-லிருந்து ரூ. 50-ஆகவும், கல்யாண உற்சவ லட்டு (பெரிய லட்டு) ரூ. 100-லிருந்து ரூ. 200 ஆகவும், வடை ரூ. 25-லிருந்து ரூ.50-ஆகவும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x