Published : 22 Oct 2023 01:25 PM
Last Updated : 22 Oct 2023 01:25 PM
புதுடெல்லி: இஸ்ரேல்- ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும்நிலையில், உயிர் காக்கும் மனிதாபிமான உதவிப் பொருள்களை காசாவுக்கு அனுப்பி வைத்தது இந்தியா.
உலக நாடுகள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தையாக மாறியிருக்கிறது ஹாமாஸ்- இஸ்ரேல் போர். இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் தீக்கிரையாகியிருக்கிறது காசா பகுதி. பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி வயதில் முதிர்ந்தவர்கள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்குச் சீனா, ஈரான், சிரியா, லெபனான் முதலான நாடுகளும், இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்திருக்கின்றன.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடி, தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்’’ என்று இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, சில தினங்களுக்குப் பிறகு பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் (Mahmoud Abbas) தொலைபேசியில் உரையாடிய மோடி, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்யும் என உறுதியளித்திருக்கிறார்.
அதை மெய்பிக்கும் விதமாக, இந்தியா சார்பில் மருத்துவ மற்றும் நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவுக்கு புறப்பட்டது விமானம். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் தளத்தில், "காசாவில் வசிக்கும் மக்களுக்கு இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளது.
6.5 டன் மருந்து மற்றும் 32 டன் பேரிடர் நிவாரண பொருட்களுடன் இந்திய விமானப்படை விமானம் எகிப்தின் அல் அரிஸ் விமான நிலையத்துக்கு கிளம்பி உள்ளது. நிவாரணப் பொருட்களில், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், ஸ்லீப்பிங் பைகள், தார்ப்பாய்கள், சுகாதார பொருட்கள் உள்ளிட்டவை இருக்கின்றன'' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT