Published : 21 Oct 2023 08:31 AM
Last Updated : 21 Oct 2023 08:31 AM
புதுடெல்லி: பாலின சமத்துவமின்மையை சரி செய்ய உறுதியான நடவடிக்கைகள் தேவை என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இவ்விஷயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மத்திய கண்காணிப்பு வாரியத்தின் 29-வது கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மன்சுக் மாண்டவியா, "சிறுமிகள் மற்றும் மகளிருக்கு எதிரான பாலின சமத்துவமின்மையை சரி செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை. இது அதற்கான தருணம். குறைந்து வரும் குழந்தை பாலின விகிதம் மற்றும் குழந்தை பிறப்பில் பாலின விகிதம் ஆகியவை கூர்ந்து கவனிக்கத் தக்கவை.
பாலின சமத்துவத்தை நோக்கிய தேசத்தின் பயணம் நம்பிக்கை அளிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட மாதிரிப் பதிவு கணக்கெடுப்பு இதனை உறுதிப்படுத்துகிறது. 2017-19 ஆம் ஆண்டில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 904 பெண் குழந்தைகள் என இருந்தது. 2018-20 ஆம் ஆண்டில் இது 907 ஆக அதிகரித்திருக்கிறது. முக்கியமாக, கணக்கெடுக்கப்பட்ட 22 மாநிலங்களில் 12 மாநிலங்களில் இந்த முன்னேற்றம் தெரியவந்துள்ளது. கருத்தரிப்புக்கு முந்தைய மற்றும் மகப்பேறுக்கு முந்தைய நோயறிதல் நுட்பங்கள் (கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிவதைத் தடுக்கும்) சட்டம், 1994-ஐ செயல்படுத்துவதில் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
சமீபத்திய மாதிரிப் பதிவு ஆய்வுகள் அறிக்கையின் படி, 2015-ஆம் ஆண்டில் ஐந்து புள்ளி இடைவெளியுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் பாலின இடைவெளி இரண்டு புள்ளிகள் குறைவைக் கண்டுள்ளது. பத்து மாநிலங்கள் பாலின இடைவெளியைத் திறம்பட மாற்றியமைத்துள்ளன. இது பெண் குழந்தைகளின் பாலின விகிதங்களில் சாதகமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்த விஷயத்தில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை" என மாண்டவியா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT