Published : 21 Oct 2023 08:21 AM
Last Updated : 21 Oct 2023 08:21 AM
புதுடெல்லி/ பெங்களூரு: பெங்களூரு மெட்ரோவில் புதிதாக 2 வழித்தடங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக பெங்களூரு மெட்ரோவில் கிருஷ்ணராஜபுரம் பையப்பனஹள்ளி, கெங்கேரி செல்லகட்டா ஆகிய இரு வழித் தடங்களில் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பேசுகையில், '' புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த 2 வழி மெட்ரோ ரயில் சேவை மூலமாக பெங்களூருவின் போக்குவரத்து மேலும் மேம்படும். இதில் தினசரி 8 லட்சம் பயணிகள் பயணிக்கலாம். இதன் மூலம் தொழில்துறையினரும், பொதுமக்களும் அதிகளவில் பயனடைவார்கள்''என்றார்.
முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘‘மெட்ரோ ரயிலின் வருகைக்கு பின்னர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்துள்ளது. குறைவானநேரத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவர முடிகிறது. அடுத்தகட்ட மெட்ரோ பணிகளை வேகமாக முடிக்க வலியுறுத்தப்பட்டுள் ளது''என்றார்.
நமோ பாரத் ரயில் சேவை: நாட்டின் ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளை விரைவாக இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக அதிவேக ரயில் சேவையான ‘நமோ பாரத்'இயக்கப்படுகிறது. முதல்கட்டமாக டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
டெல்லி முதல் மீரட் இடையே ரூ.30,274 கோடி செலவில் இந்தரயில் சேவையை தொடங்க பணிகள்நடைபெற்று வருகின்றன. மொத்தம் 82 கி.மீ தூர வழித்தடத்தில் 25 ரயில் நிலையங்கள், 2 பணிமனைகள் அமைந்துள்ளன. இதில் 68.03 கி.மீ நீளத்துக்கு உயர்மட்ட பாதையாகவும், 14.12 கி.மீ நீளத்துக்கு சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் முதற்கட்ட மாக துஹாய் பணிமனை முதல் உ.பி.யின் சாஹிபாபாத் இடையேயான 17 கிலோமீட்டர் தூர ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார். அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய வழித்தடத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமே உள்ளதால் இந்த ரயில் குறைவான வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT