Published : 20 Oct 2023 03:26 PM
Last Updated : 20 Oct 2023 03:26 PM

கழிவுநீர் அகற்றும்போது தொழிலாளர் இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு: அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. நமது நாடு அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தாலும், நாடு முழுவதும் தூய்மைப் பணி என்ற பெயரில் குப்பை அள்ளுவது, மனிதர்களே கழுவுநீர் தொட்டிக்குள் இறங்கி அடைப்புகளை சுத்தம் செய்வது என அதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்த வண்ணம்தான் இருக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்க்கு தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் (Manual Scavengers Deaths Prevention Act) 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த நடைமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுநல வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கழிவுநீர் அகற்றும்போது படுகாயமடைந்து, நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், மேலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x