Published : 20 Oct 2023 01:14 PM
Last Updated : 20 Oct 2023 01:14 PM
புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவையான ‘ரேபிடக்ஸ்’ இன்று பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரப் பிரதேசத்தின் சாஹிபாபாத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவைக்கு ‘நமோ பாரத்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
டெல்லியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள நகரங்களை செமி விரைவு ரயில் சேவை மூலம் இணைக்கும் இத்திட்டத்தில் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து காசியாபாத் வழியாக மீரட் வரை செல்லும் இந்த ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவைக்கு ‘நமோ பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக இத்திட்டம் டெல்லி - காசியாபாத் - மீரட் இடையே 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு நமோ பாரத் ரயில் இயக்கப்படும். டெல்லி - மீரட்டின் மோடிபுரம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பாதையில் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 2025ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தூரத்தை நமோபாரத் ரயில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்கும். நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும் என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
PM @narendramodi is on board the Regional Rapid Train Namo Bharat with co-passengers who are sharing their experiences, including on how this train service will have a positive impact. pic.twitter.com/pIsZ5vnXcM
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. எனினும், இது 160 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே இது இயக்கப்படும். முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த ரயில், பாதுகாப்பானதாகவும், சவுகரியங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். ரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக இதழ்கள், கால்கள் வைக்கும் இடத்தில் மிதியடி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதில் ஒரு பெட்டி பிரிமியம் பெட்டியாகவும், ஒரு பெட்டி மகளிருக்கானதாகவும் இருக்கும். கடைசி பெட்டி, வீல் சேர் அல்லது ஸ்டெரெச்சர் மூலம் பயணிகள் ஏறும் வகையில் வசதிகள் இருக்கும். இந்த திட்டம் ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT