Published : 20 Oct 2023 06:05 AM
Last Updated : 20 Oct 2023 06:05 AM
ஜகதல்பூர்: சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது.
இந்நிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்ட தலைநகரான ஜகதல்பூரில் நேற்று பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: பஸ்தார் பிராந்தியம் ஒரு காலத்தில் நக்சல் வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில இடங்களில் நக்சலைட் அச்சுறுத்தல் நீடிக்கிறது. சத்தீஸ்கரில் பாஜகவை நீங்கள் ஆட்சியில் அமர்த்தினால் ஒட்டுமொத்த மாநிலத்தையும் நக்சலைட் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்போம்.பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் நக்சல் வன்முறைச் சம்பவங்கள் 52% குறைந்துள்ளன.
உங்கள் முன் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நக்சலிசத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ், மறுபுறம், நக்சலிசத்தை ஒழிக்கும் பாஜக. ஊழலில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை காங்கிரஸ் கட்சி டெல்லிக்கு அனுப்பியுள்ளது. ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு காஸ் சிலிண்டர்கள், கழிப்பறைகள், குடிநீர், சுகாதார வசதிகள், தானியங்கள் மற்றும் வீடுகளை பாஜக வழங்கியுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனுப்பும் பணம் ‘காங்கிரஸின் ஏடிஎம்’ மூலம் டெல்லிக்கு திருப்பி விடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT