Published : 20 Oct 2023 06:20 AM
Last Updated : 20 Oct 2023 06:20 AM
ஹைதராபாத்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தெலங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தெலங்கானாவில் நடந்த பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக ஹைதராபாத் வந்தார். இதில் 2-ம் நாளான நேற்று அவர், பெத்தபல்லி மாவட்டத்தில் பேருந்து யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்கே பேருந்தில் இருந்தபடியே பொதுமக்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது ராகுல்காந்தி பேசும்போது, “நான் பாஜகவிற்கு எதிராக போராடி வருகிறேன். ஆதலால்தான் என்மீது ஏகப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. என்னுடைய உறுப்பினர் பதவியை பறித்துக் கொண்டனர். என் வீட்டையும் எடுத்துக் கொண்டனர். உங்கள் முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜகவை மறைமுகமாக ஆதரித்து வருகிறார். அதனால்தான் அவர் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவதில்லை. ஓவைசியின் எம்.ஐ.எம் கட்சிகூட நாடு முழுவதும் தேர்தல்களில் பங்கேற்று பாஜகவிற்கு ஒத்துழைக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஓபிசி பிரிவினரின் மக்கள் தொகை எவ்வளவு என கேள்வி எழுப்பினேன். நாட்டை 90 உயர் அதிகாரிகள் ஆட்சி செய்கிறார்கள். ஆனால், அதில் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் வெறும் 3 அல்லது 4 பேர் மட்டுமே இருப்பார்கள். மருத்துவத்தில் எப்படி எக்ஸ்ரே தேவையோ, அதுபோல் நாட்டிற்கும் எக்ஸ்ரே தேவை. அதனால், நம் நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT