Last Updated : 19 Oct, 2023 09:37 AM

6  

Published : 19 Oct 2023 09:37 AM
Last Updated : 19 Oct 2023 09:37 AM

நாட்டை உலுக்கிய நிதாரி சம்பவத்தின் திகில் பின்னணி!- அலகாபாத் உயர் நீதிமன்றக் கண்டனத்துக்குள்ளான சிபிஐ

சுரேந்தர் கோலி (இடது), மொஹிந்தீர் சிங் பாந்தேர் (வலது)

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் நிதாரி தொடர் கொலை வழக்கின் பின்னணி மிகுந்த திகில் நிரம்பியது. நாட்டையே உலுக்கிய அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சிபிஐயின் விசாரணையை கடுமையாகக் கண்டித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் உ.பி.யின் நொய்டாவின் செக்டார் குடிசைப்பகுதியைச் சேர்ந்த 31 ஏழை குடும்பங்களின் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போவதாக செய்திகள் வெளியாகின. இவர்களை போலீஸாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை எனப் புகார்கள் கிளம்பின.

இதில் கடைசியாக அக்டோபர் 2006-ல் பாயல் எனும் இளம் பெண்ணும் காணாமல் போனதாக வழக்கு பதிவானது. பாயலைத் தேடியபோது அவருடைஇய கைப்பேசி ஒரு ரிக்ஷா ஓட்டுநரிடமிருந்து போலீஸாரால் மீட்கப்பட்டது.

அந்த கைப்பேசியை செக்டார் 31 இல் உள்ள டி-5 எனும் பங்களாவின் பணியாளர் தனக்கு கொடுத்ததாக ரிக்ஷாக்காரர் கூறினார். அதனைத் தொடர்ந்து நிதாரி கிராமத்தின் அந்த டி-5 பங்களாவின் பணியாளரான சுரேந்தர் கோலி போலிஸாரிடம் சிக்கினார்.

அவரது விசாரணையில் வெளியான தகவல்கள் நம்ப முடியாதவையாக இருந்தன. எனினும், பணியாளர் கோலி கூறியதன் பேரில் டி-5 பங்களா வளாகத்தில் உள்ள கால்வாயை டிசம்பர் 2006 இல் போலீஸ் தோண்டியது.

கால்வாய்க்குள் ஒன்றன்பின் ஒன்றாக சடலங்கள், எலும்புக்கூடுகள் , 26 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது நாட்டையே உலுக்கியது. இன்னும் சில உடல்களின் துண்டுகள் அந்த பங்களாவின் கழிவறையிலும், சமையலறையின் குளிர்சாதனப் பெட்டியிலும் வைக்கப்பட்டிருந்தன.

இதற்கு காரணமான புகார், பங்களாவின் உரிமையாளரான மொஹிந்தீர் சிங் பாந்தேர் மீதும் எழுந்தது. குழந்தை, பெண்களை கொலை செய்து உள்ளே புதைத்தாகக் குற்றவாளி கோலி ஒப்புக் கொண்டார்.

சில குழந்தைகளின் முக்கிய சில உறுப்புகளை உண்டதாகவும் கோலி விசாரணையில் கூறி இருந்தார். இருவரும் கைது செய்யப்பட்டு 10 பெண்கள் உள்ளிட்ட 19 குழந்தைகள் கொலையானதாக வழக்குகள் பதிவாகின.

வழக்குகளின் விசாரணையில் சிபிஐ, டி-5 பங்களாவின் பெரும்பாலானப் பகுதிகளை உடைத்து பார்த்தது. குற்றவாளிகளுக்கு பிரைன் மேப்பிங், நார்கோட்டிக் உள்ளிட்டப் பலவகை விசாரணைகளை நடத்தியது.

இதன் முடிவில், பணியாளர் சுரேந்தர் கோலி, ஒரு மனநோயாளி எனவும், அவர் குழந்தைகளை கொன்று அந்த உடல்களுடன் தவறான உறவு கொண்டதாகவும் கூறியது. இதற்கு கோலியின் உரிமையாளர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தது. 6 வழக்குகள் மொஹிந்தர்சிங் மீதும், 13 வழக்குகள் கோலி மீதும் பதிவாகின. இருவர் மீதான வழக்குகள் காஜியாபாத்தின் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றன.

ஜுலை 2007 இல் வெளியான சிபிஐ நீதிமன்ற தீர்ப்பில், சுமார் 13 வழக்குகளில் கோலியின் புகார்கள் உறுதியாகி ஆயுள் தண்டனையும் பிறகு தூக்கு தண்டனை அளித்து உத்தரவிடப்பட்டது. மொஹிந்தர்சிங் மீதானப் புகார்களும் உறுதி செய்யப்பட்டன. 2 வழக்குகளில் தூக்கும் மீதத்தில் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டன. இதன் மேல்முறையீடு நடைபெற்ற உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்துள்ளது. கடந்த திங்கள்கிழமை, வெளியான தீர்ப்பில், முறையான ஆதாரங்கள் இல்லை எனக் காரணம் கூறி சிபிஐயின் விசாரணைகள் கண்டிக்கப்பட்டுள்ளன.

தனது தீர்ப்பில் நீதிபதி அஸ்வின் குமார் மிஸ்ரா, நீதிபதி எஸ்.எச்.ஏ.ரிஜ்வி கூறுகையில், ‘சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றங்களை நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது. ஆதாரங்களையும், சாட்சியங்களையும் திரட்டுவதில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. விசாரணை அமைப்பு அவ்வப்போது தனது முடிவுகளை மாற்றிக் கொண்டது.

இவ்வழக்கில் உடல் உறுப்புகள் திருட்டு நடந்திருக்கலாம் அதையும் விசாரிக்க மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலன் அமைச்சகக் குழு பரிந்துரைத்திருந்தது. இதன் பிறகு அந்த விசாரணை நடைபெறாதது துரோகத்துக்கு இணையானது. இதன்மூலம், பொதுமக்களின் நம்பிக்கையை விசாரணை அமைப்பு இழந்து விட்டது.’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோல், மேலும் பல புகார்கள் சிபிஐ மீது உயர் நீதிமன்றம் அடுக்கியுள்ளது. அதிக ஆர்வம் இன்றி நடத்தப்பட்ட விசாரணையில் பலதவறுகள் நடந்திருப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குற்றவாளிகளைக் கைது செய்து 60 நாட்களாக சிறையில் வைத்தபின் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியுள்ளதாகவும் கண்டித்துள்ளது. உலக அளவில் இதுவரை நடந்திராத வகையிலான சம்பவத்தில் சிபிஐ மீது புகார்தாரர்கள் வைத்த நம்பிக்கை வீணாகி இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதனால், சிபிஐ விசாரணையின் நடவடிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளன. இருப்பினும், இந்தத் தீர்ப்பின் மீது சட்ட ஆலோசனைகளைப் பெற்று நிதாரி வழக்கில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தொடுக்கத் தயாராகி வருகிறது.

நிதாரி சம்பவத்தால் அப்போது ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசின் மீது நிதாரிவாசிகள் கடும் கோபம் அடைந்தனர். அவர்கள் பலமுறை நொய்டா போலீஸார் மீது கல்வீச்சுக்களை நடத்தினர்.

உபி போலிஸாரிடம் வந்த புகார்கள் மீது பொறுப்பான விசாரணை நடந்திருந்தால், இந்த சம்பவங்கள் நடந்திருக்காது என்ற கருத்து எழுந்தது. இதன் காரணமாக, நொய்டாவின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 30 போலீஸார் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் தலைவரான சோனியா உள்ளிட்ட பல கட்சிகளின் அரசியல்வாதிகள் நிதாரி சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்தனர். இவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரியதன் பேரில் நிதாரி வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ நீதிமன்றத்தில் ஒருநாள் குற்றவாளிகள் மீது கடும் கோபமான வழக்கறிஞர்களும், பாதிக்கப்பட்டவர்களும் இருவர் மீதும் நீதிமன்றத்திலேயே தாக்குதல் நடத்தினர். இதில், ரத்த வெள்ளமான குற்றவாளிகளை போலீஸார் காப்பாற்றியது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x