Published : 19 Oct 2023 06:01 AM
Last Updated : 19 Oct 2023 06:01 AM
பெங்களூரு: ‘மைசூரு மாநிலம்' ‘கர்நாடகா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கன்னடம் மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் பெங்களூருவில் நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:
1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சில பகுதிகள் அன்றைய மைசூரு மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இதனால் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் இங்கு கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
இதுதவிர, வேலைவாய்ப்பு காரணமாக ஏராளமானோர் இங்கு குடியேறியுள்ளனர். கர்நாடகாவில் வசிக்கும் அனைவரும் கன்னடர்கள்தான். அதனால் இங்கு வாழும் அனைவரும் கன்னட மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும். கன்னடர்கள் பிறமொழியினருக்கு கன்னடத்தை கற்றுக் கொடுக்காமல், அவர்களின் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் கோடிக்கணக்கானோர் கன்னடம் தெரியாமல் இருக்கின்றனர்.
கன்னடர்கள் முதலில் கன்னட மொழியை மதிக்க வேண்டும். கன்னடத்தை முழுமையாக கற்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் இதனை கற்பார்கள். தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் உள்ளூர் மொழியை கற்காமல் எதையும் செய்ய முடியாது. ஆனால் இங்கு எல்லாமே ஆங்கில மயமாக இருக்கிறது.
அதிகாரிகள், அமைச்சர்கள் கூட ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். கன்னடம் அலுவல் மொழியாக இருந்தும், நடைமுறையில் ஆங்கிலமே அலுவல் மொழியாக இருக்கிறது. இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT