Published : 18 Oct 2023 01:43 PM
Last Updated : 18 Oct 2023 01:43 PM

மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான ஊழல் புகார் - வரும் 26ம் தேதி விசாரிக்கிறது நாடாளுமன்ற நெறிமுறைக் குழு

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.,மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகார் மீது, பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் ஆகியோரிடம் மக்களவை நெறிமுறைக்குழு அக்.26-ம் தேதி விசாரணை நடத்துகிறது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றார் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு துபே ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், "எரிசக்தி மற்றும் கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தத்தை ஹிராநந்தனி குழுமம், அதானி குழுமத்திடம் இழந்தது. கடந்த 2019 முதல் 2023 வரை திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் எழுப்பிய 61 கேள்விகளில் 50 கேள்விகள் தொழிலதிபர் ஹிராநந்தனி குழுமத்தின் தர்ஷன் உத்தரவின் பேரில் கேட்கப்பட்ட கேள்விகள்.

இதற்கு பிரதிபலனாக தர்ஷன் ஹிராநந்தனி எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு ரூ.2 கோடிக்கு காசோலை வழங்கினார். மேலும் விலையுயர்ந்த ஐபோன் உட்பட பல பரிசு பொருட்களையும் வழங்கினார். மஹுவா மொய்த்ரா தேர்தலில் போட்டியிட்டபோது ரூ.75 லட்சத்துக்கு காசோலையை தர்ஷன் வழங்கினார். இதை வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய் கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக அவர் சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மஹுவா மீதான புகாரை செவ்வாய்க்கிழை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு பரிந்துரைத்து அனுப்பியிருந்தார். இந்தக்குழுவின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த வினோத் குமார் சோன்கர் இருக்கிறார்.

இதனிடையே, நிஷிகாந்த் துபே, ‘திரிணமூல் காங்ரகிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது மக்களவை இணையதளத்தை பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி மற்றும் அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனம் அதன் சொந்த லாபத்துக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தன்மீதான புகார்கள் அனைத்தையும் மறுத்துள்ள மஹுவா மொய்த்ரா, ‘‘போலி பட்டம் பெற்றவர்கள் உட்பட பல உரிமை மீறல் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை எல்லாம் முடித்து விட்டு எனக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை வரவேற்கிறேன்’’ என்றார்.

இந்தநிலையில், தனக்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பும் நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தொகாத்ராய், சில ஊடக நிறுவனங்கள் மற்றும் பல சமூக வலைதளங்கள் ஆகியோரை கட்டுப்படுத்த வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனுதாக்கல் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x