Published : 18 Oct 2023 12:50 PM
Last Updated : 18 Oct 2023 12:50 PM
புதுடெல்லி: "தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இந்தியாவின் பிரதமர் இல்லை. அவர் அதானியை பாதுகாக்கவும் இல்லை. அதனால் அவரிடம் அதானி பற்றி கேட்க முடியாது" என்று ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி டெல்லியில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள சரத் பவார் அதானியை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "இல்லை. நான் சரத் பவாரிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. சரத் பவார் இந்தியாவின் பிரதமர் இல்லை. அவர் அதானியைப் பாதுகாக்கவில்லை. அதனால் நான் அதானி குறித்து சரத் பாவரிடம் கேட்காமல், மோடியிடம் கேட்கிறேன். ஒருவேளை சரத் பவார் இந்தியாவின் பிரதமர் பதவியில் இருந்து, அவர் அதானியை பாதுகாத்தார் என்றால் நான் பவாரிடமும் கேள்வி கேட்பேன்" என்றார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், அதானியின் மர்மமான நிலக்கரி இறக்குமதி குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ்-ல் வந்த கட்டுரையை மேற்கோள் காட்டி நாட்டில் அதானியால் மின்சார கட்டணம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், "அதானி இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரியை வாங்குகிறார். அது இந்தியாவுக்கு வரும் போது அதன் விலை இரண்டு மடங்காக அதிகரித்துவிடுகிறது. இதனால் மின்கட்டணம் அதிகரித்துள்ளது. அதானி நேரடியாக எளிய மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுக்கிறார். இது ஒரு நேரடியான திருட்டு.
இந்த முறை பொதுமக்களின் பைகளில் இருந்து பணம் திருடப்படுகிறது. நீங்கள் உங்கள் வீட்டில் மின்விசிறி அல்லது மின்விளக்கு பயன்படுத்தும் எல்லா நேரமும் நேரடியாக அதானியின் பைக்கு பணம் செல்கிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்கள். அது ரூ.32,000 கோடி என்பதை மறந்து விடாதீர்கள். பிரதமர் மோடியின் பாதுகாப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. ஆனால் இது குறித்து எந்தவிதமான விசாரணையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சமீபத்தில் குஜாரத்தில் நடந்த ஒரு திட்டத் தொடக்க விழாவில் சரத் பவார் அதானியைச் சந்தித்து பேசினார். அதானியுடனான பவாரின் நெருக்கம் இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் ராகுலின் இந்தக் கருத்து வெளியாகியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...