Published : 18 Oct 2023 08:21 AM
Last Updated : 18 Oct 2023 08:21 AM

நகர்ப்புற மேம்பாட்டுக்காக 9 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு - மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் தகவல்

ஹர்தீப் சிங் பூரி | கோப்புப் படம்

புதுடெல்லி: நகர்ப்புற மேம்பாட்டுக்காக 2014-ம் ஆண்டு முதல் ரூ.18 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

இந்தியாவின் நகர அமைப்புகள் தொடர்பான ஆண்டு ஆய்வின் ஆறாவது பதிப்பான ஏ.எஸ்.ஐ.சி.எஸ்-2023 அறிக்கையை அமைச்சர் நேற்று(செவ்வாய்கிழமை) புதுடெல்லியில் வெளியிட்டார். இதனை அடுத்துப் பேசிய அவர், "இந்த அறிக்கை ஒரு நுணுக்கமான மற்றும் பாராட்டத்தக்க முயற்சி. இந்த அறிக்கையில் 82 நகராட்சி சட்டங்கள், 44 நகர ஊரமைப்பு சட்டங்கள், 176 தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் அறிவிப்புகள், 32 பிற கொள்கை மற்றும் திட்ட ஆவணங்கள், இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான 27 கூடுதல் தரவுத்தொகுப்புகள் ஆகியவை உள்ளன.

நகர்ப்புற நிர்வாகத்தில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு என்ற செயல்திட்டத்தை நோக்கி செயல்படுவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த அறிக்கை அங்கீகரித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிக்குழு மானியம் 13-வது நிதிக்குழுவில் இருந்து 15-வது நிதிக்குழு வரை 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து, உலகில் எங்கும் இல்லாத வகையில் மிகவும் விரிவான மற்றும் திட்டமிடப்பட்ட நகரமயமாக்கல் திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 1.19 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு அதில் 77 லட்சம் வீடுகள் பயனாளிளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

திடக்கழிவு பதப்படுத்துதல் 2014 ஆம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்தது. தற்போது அது 76 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் 100 சதவீத திடக்கழிவு பதப்படுத்தல் எட்டப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 6,069 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. விரைவில் உலகின் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பாக இந்தியா மாறும்" என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x