Published : 18 Oct 2023 04:43 AM
Last Updated : 18 Oct 2023 04:43 AM

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: நாடாளுமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தன்பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரிய வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கின் தீர்ப்புக்காக டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று காத்திருந்த தன்பாலின ஈர்ப்பாளர் அமைப்பினர்.

புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின்5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும் - ஆணும், பெண்ணும் - பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அதன் விவரம்:

தலைமை நீதிபதி சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தால் சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் ஷரத்துகளை சேர்க்கவும் முடியாது. திருமணங்கள் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றமும், சட்டப் பேரவைகளும்தான் இயற்ற முடியும்.

அதேவேளையில், திருமண பந்தம்என்பது நிலையானது அல்ல. தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண பந்தத்தில் இணைய உரிமையும், சுதந்திரமும் உள்ளது. அதுபோன்ற இணையேற்புகளை அங்கீகரிக்க முடியாமல் போவது, அந்த சமூகத்தினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்களால் இப்போதுள்ள சட்டத்தின்படி திருமணத்துக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ள இயலாது என்பதால் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளுமே தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் உறவு, அரசால் அசட்டை செய்யப்படவோ, பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதோ கூடாது. இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளும் தன்பாலின ஜோடிக்கு எதிரான புகார் குறித்து எப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பு போலீஸார் முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டும்.தன்பாலின ஜோடிகளின் உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தன்பாலின உறவு என்பது காலம் காலமாக அறியப்பட்ட இயற்கை நிகழ்வு.அவர்களது உரிமைகளை முடிவு செய்யமத்திய அரசு குழு அமைக்கும் என்றுசொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாதாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்துகொள்கிறது.

நீதிபதி ரவீந்திர பட்: திருமண பந்தங்களை சட்டங்கள்தான் அங்கீகரிக்கும். இந்த நீதிமன்றம் அதற்கான சட்டங்களை இயற்றும்படி அரசை வலியுறுத்த மட்டுமே முடியும்.

இணையேற்புகள் சட்ட அங்கீகாரம் இல்லாமல் உயிர்ப்புடன் இருக்க இயலாது. ஓர் அமைப்பை உருவாக்குவது என்பது அரசின் கையில்தான் உள்ளது. அத்தகைய அமைப்பை உருவாக்க நீதிமன்றம் வாயிலாக வலியுறுத்தலாம்.

சில விஷயங்களில் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துகளுடன் உடன்படுகிறேன். சில விஷயங்களில் வேறுபடுகிறேன்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் மூலம் திருமண சமத்துவத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த வழக்கில் 5 பேரில் 4 நீதிபதிகள் மட்டுமே தீர்ப்பை வழங்கியுள்ளனர். அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெண் நீதிபதி ஹீமா கோலி தனது தீர்ப்பை வழங்கவில்லை.

4 வகையான தீர்ப்புகள் வந்த நிலையில், தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதை நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் மட்டுமே செய்ய முடியும் என்று 3 நீதிபதிகள்தெரிவித்துள்ளனர். இறுதியாக 3-க்கு 2என்ற விகிதத்தில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு திருமண உரிமையை வழங்கஇயலாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x