Published : 17 Oct 2023 03:12 PM
Last Updated : 17 Oct 2023 03:12 PM
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரை, மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைத்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிரநன்தனியிடம் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற விசாரணை குழுவினை அமைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். இந்தப் புகாரை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது மக்களவை நெறிமுறைக் குழுவின் தலைவராக பாஜகவின் வினோத் குமார் சோன்கர் இருக்கிறார்.
முன்னதாக, சபாநாயகருக்கு துபே எழுதிய கடிதத்தில் வழக்கறிஞர் ஒருவரின் ஆவணங்களைச் சுட்டிக்காட்டி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கும், தொழிலதிபருக்கும் இடையில் லஞ்சம் பரிமாறப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், 2019-ல் ருந்து 2023 வரை மஹுவா 61 கேள்விகள் கேட்டுள்ளார். அவற்றில் 50 கேள்விகள் ஹிரநன்தனி மற்றும் அவரது வணிக நிறுவனத்தை பாதுகாக்கும் உள்நோக்கத்துடன் கேட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துபேயின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எக்ஸ் பதிவு மூலம் பதிலளித்துள்ள மஹுவா, “பாஜக எம்.பி.க்களுக்கு எதிரான பல நோட்டீஸ்கள் நிலுவையில் உள்ளன. முதலில் துபேவுக்கு எதிரான போலி வாக்குமூலம் குறித்த விசாரணையை முடித்துவிட்டு, என் மீதான குற்றச்சாட்டுக்கு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்" என்று சபாநாயகரை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில்தான், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எம்.பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரை, மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஹிரநன்தனி குழுமம் மறுத்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ‘நாட்டின் நலனுக்காக நாங்கள் அரசுடன் இணைந்து கூட்டாக செயல்பட்டிருக்கிறோம். இனியும் அதனைச் செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ‘நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலைதள லாகினை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநன்தனி மற்றும் அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனம் அதன் சொந்த லாபத்துக்கு பயன்படுத்திக்கொள்ள மவுஹா அனுமதித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியும் மத்திய அமைச்சர்களுக்கு பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே வலியுறுத்தியிருந்தார்.
இந்தப் புகாருக்கும் பதில் அளித்திருந்த மஹுவா மொய்த்ரா, “நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களது பணிகளும் அவர்களின் தனி உதவியாளர்கள் (பிஏ), உதவியாளர்கள் உள்ளிட்ட பெரிய குழுவினரால் செய்யப்படுகிறது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற இணையத்தின் உள்நுழைவு மற்றும் எங்கிருந்து பயன்படுத்துகிறார்கள் என்ற விவரங்களை சிடிஆருடன் மத்திய அமைச்சர் வெளியிட வேண்டும். அதேபோல் அலுவலர்களுக்கு இணையத்துக்குள் உள்நுழைய வழங்கப்பட்ட பயிற்சி குறித்த விவரங்களையும் தயவுசெய்து வெளியிட வேண்டும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT