Published : 16 Oct 2023 02:51 PM
Last Updated : 16 Oct 2023 02:51 PM
பிரயாக்ராஜ்: நொய்டாவின் நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு உதவியாளர் சுரேந்தர் கோலியை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. முன்னதாக, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படிருந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் நிதாரி பகுதியில் 2006 அக்டோபர் 12-ம் தேதி அஞ்சலி என்ற இளம்பெண் காணாமல் போனார். அதேபோல் அந்த காலக்கட்டத்தில் பல சிறுமிகளும் காணாமல் போயினர். தீவிர விசாரணையில் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் என்பவரின் வீட்டில் அஞ்சலி வேலை செய்தது தெரிந்தது. அதன்பின்னர் மொகிந்தர் சிங் வீட்டில் உதவியாளராக இருந்த சுரேந்திர கோலி என்பவரிடம் தீவிர விசாரணை நடந்தது. மொகிந்தர் வீட்டின் பின்புறம் சில மண்டை ஓடுகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று அஞ்சலியுடையது என்பது டிஎன்ஏ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மொகிந்தர், சுரேந்தர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, சாட்சியங்களை அழித்தல் உட்பட பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஞ்சலியை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்தது தொடர்பான வழக்கு காசியாபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சிபிஐ நீதிபதி பி.கே.திவாரி 2017-ல் அளித்த தீர்ப்பில், ‘அஞ்சலியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததில் மொகிந்தர், சுரேந்தருக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு உதவியாளர் சுரேந்தர் கோலியை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து மொகிந்தர் சிங் பாந்தரின் வழக்கறிஞர் மனிஷா பண்டாரி கூறுகையில், “தனக்கு வழங்கப்பட்ட இரண்டு மரண தண்டனையை எதிர்த்து மொகிந்தர் சிங் பாந்தர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. அவருக்கு எதிராக 6 வழக்குகள் இருந்தன. அதில் நான்கு வழக்கில் அவர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுரேந்தர் கோலிக்கு எதிரான அனைத்து வழக்குகளின் மேல்முறையீடுகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது நிதாரி கொலை வழக்கில் மொகிந்தர் சிங் பாந்தருக்கு எதிராக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. அவர் விரைவில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT