Published : 04 Jul 2014 08:51 AM
Last Updated : 04 Jul 2014 08:51 AM
இறப்பதற்கு முன் சுனந்தா புஷ்கர் நள்ளிரவில் தமக்கு போன் செய்து கதறி அழுததாக டெல்லியைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளர் நளினி சிங் தெரிவித்துள்ளார்.
இந்தி செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் நளினி சிங் கூறியதாவது: “ஜனவரி 17-ம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு சுனந்தா தன்னுடைய செல்போனிலிருந்து எனக்கு போன் செய்தார். அப்போது, அவர் கதறி அழுததுடன் மிகவும் பதற்றமாகவும் இருந்தார். அவருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும் இடையே ட்விட்டர் மூலம் நடந்த கருத்து மோதல்தான் இதற்கு காரணம் என்று முதலில் நினைத்தேன்.
ஆனால், சசிதரூர் தனது பிளாக்பெர்ரி போனில் இருந்த பிபிஎம் மெஸன்ஜரின் குறுந்தகவல்களை அழித்து விட்டார் என சுனந்தா என்னிடம் வருத்தத்துடன் கூறினார். நான் ஒரு பத்திரிகையாளர் என்பதால் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டு படிக்க உதவ வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது சுனந்தாவை நான் சந்தித்தேன். அப்போது, பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும் சசி தரூருக்கும் இடையிலான விவகாரம் பற்றி என்னிடம் விவாதித்தார்.
தராருடன் சசிதரூர் துபாயில் நடத்திய சந்திப்பு குறித்தும் சுனந்தா மிகவும் கவலை கொண்டி ருந்தார்” என்று நளினி சிங் கூறியுள்ளார்.
கருத்து கூற சசி தரூர் மறுப்பு
சுனந்தா புஷ்கர் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாற்றம் செய்ய தன்னை சிலர் வற்புறுத்தியதாக டாக்டர் சுதிர் குப்தா கூறிய புகார் தொடர்பாக கருத்து கூற முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மறுத்துவிட்டார்.
சுனந்தாவின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் சுதிர் குப்தா தலைமையிலானோர் பிரேதப் பரிசோதனை செய்தனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சுனந்தாவின் மரணம் இயற்கையானதுதான் என்று தெரிவிக்க வேண்டும் என சிலர் வற்புறுத்தியதாகவும், அதற்குத் தான் உடன்படவில்லை என்றும் டாக்டர் சுதிர் குப்தா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சசி தரூரிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேட்டபோது, “சுதிர் குப்தாவின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. இது தொடர்பாக போலீஸார்தான் விசாரித்து தீர்வு காண வேண்டும்” என்றார்.
சுனந்தா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீஸார், இந்த விவகாரத்தில் சசி தரூருக்கு தொடர்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதா என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்து பாஸி கூறியதாவது: விசாரணை முழுவதுமாக முடிவடைந்த பின்புதான், சசி தரூருக்கு தொடர்பிருக்கிறதா, இல்லையா என்பது பற்றி தெரியவரும்.
டாக்டர் சுதிர் குப்தாவின் குற்றச்சாட்டு தொடர்பாக தேவைப்பட்டால், அவரிடமும், சசி தரூரிடமும் விசாரணை நடத்துவோம்.
இந்த வழக்கின் விசாரணையை விரைவாக நடத்த முயற்சி எடுத்துள்ளோம். விசாரணையை துரிதமாக நடத்தும்படி சசி தரூர் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பதை ஊடகங்களில் வெளியான செய்தி மூலம்தான் அறிந்துகொண்டேன்.
அப்படி எந்தவொரு கடிதமும் எங்களுக்கு வரவில்லை” என்றார். சுனந்தா இறப்பதற்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் நளினி சிங்குடன்தான் கடைசியாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT