Published : 15 Oct 2023 04:45 AM
Last Updated : 15 Oct 2023 04:45 AM

சத்தீஸ்கரில் சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக சொந்த ஊரில் வாக்களிக்கும் மக்கள்

ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக தங்கள் சொந்த கிராமத்தில் வாக்களிக்க உள்ளனர்.

ஐந்து மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7-ல் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் பஸ்தார் பிராந்தியத்தில் உள்ளன. தெற்கு சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிராந்தியம் மாவோயிஸ்ட் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதியாகும். இப் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் உள்ளன.

120 கிராமங்களில்...: இந்நிலையில் வரும் தேர்தலில் இந்தப் பிராந்தியத்தில் 120 கிராமங்களில் 126 புதிய வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் 54,000 பேர் பலன் அடைவார்கள். முந்தைய தேர்தலில்களில் இவர்கள் வாக்களிக்க 10 கி.மீ. வரை பயணம் செய்துவந்தனர்.

இந்த 54,000 பேரில் 35,000 பேர், சுதந்திரத்துக்கு பிறகு முதல்முறையாக தங்கள் சொந்த கிராமங்களில் (சுமார் 80 வாக்குச்சாவடிகளில்) வாக்களிக்க உள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த20 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரம் அல்லது வாக்குப்பெட்டிகள் கொள்ளையடித்து செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்ததன் காரணமாக எஞ்சிய 38 வாக்குச் சாவடிகள்அருகில் உள்ள கிராமங்களுக்குமாற்றப்பட்டன. மாவோயிஸ்ட்களை பின்னுக்கு தள்ளும் எங்கள் தொடர் முயற்சிகள் காரணமாக இப்போது இந்த வாக்குச்சாவடிகள் மீட்கப்பட்டுள்ளன” என்றார்.

126 புதிய வாக்குச்சாவடிகள்: பஸ்தார் பிராந்திய போலீஸ் ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறும்போது, “துப்பாக்கிகள் முழங்கும் பஸ்தார் பிராந்தியத்தில் வாக்குப் பெட்டிகள் வெற்றி பெற்ற கதையை இந்த 126 புதிய வாக்குச்சாவடிகளும் வருங்கால தலைமுறைக்கு சொல்லும். இந்த புதிய வாக்குச் சாவடிகளில் பெரும்பாலானவை இதற்கு முன் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 65 புதிய பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்ட பிறகு கள நிலவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

பஸ்தார் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தமேட்டா என்ற கிராமத்திலும் புதிய வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராம மக்கள் வாக்களிக்க 8 கி.மீ. வரை சென்று வந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் இவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர்கள் கிராமத்தில் புதிய வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 65 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்ட பிறகு கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x