Published : 24 Jan 2018 09:52 AM
Last Updated : 24 Jan 2018 09:52 AM
அரசியலுடன் கூட இந்த வாரம் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை செய்த ஒரு சாகசம் திரைப்படமானதையும் சேர்த்துப் பார்ப்போம். பெஞ்சமின் பிராட்லி – கேதரைன் கிரஹாம் என்கிற ஆசிரியர் – பதிப்பாளர் இரட்டையர், துணிச்சல்மிக்க இதழியலுக்கு உதாரணங்களாகத் திகழ்ந்தனர். இவர்களுடன் தொடர்புள்ள ‘பென்டகன் பேப்பர்ஸ்’ கதை பலமுறை பலரால் சொல்லப்பட்டுவிட்டது. இருவரும் எழுதிய சுய வரலாற்று நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. ‘வாட்டர்கேட்’ என்ற கட்சி அலுவலகத்தில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பதவி வேட்பாளரைத் தோற்கடிக்க ரிச்சர்ட் நிக்ஸன் செய்த சதியை அம்பலப்படுத்திய ‘வாட்டர்கேட்’ ஊழல், லிண்டன் ஜான்சன் காலத்தில் வியட்நாம் யுத்தம் தொடர்பாக நாட்டுக்கும் நாடாளுமன்றத்துக்கும் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்ததை அம்பலப்படுத்திய ‘பென்டகன் பேப்பர்ஸ்’ விவகாரம் ஆகிய இரண்டும் பத்திரிகையாளர்களுக்கு இன்றைக்கும் முன்னுதாரணமானவை.
‘பென்டகன் பேப்பர்ஸ்’ தந்த உத்வேகத்தால் 2006-ன் குளிர்காலத்தில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் நாங்கள் செய்த சாகசத்தை நினைவுகூர்கிறேன். வாஷிங்டன் போஸ்டும், தி நியூயார்க் டைம்ஸும் இணைந்து செயல்பட்டதைப் போல ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தி இந்து’ இணைந்து செய்த சாகசம் அது. இரு பத்திரிகைகளும் சந்தையில் நேரடிப் போட்டியாளர்கள் அல்ல; எண்ணங்கள், சிந்தனைகளில் தீவிரமாகப் போட்டியிட்டவை. குறிப்பாக பொருளாதார, ராணுவ உத்திக் கொள்கைகளில் மாறுபட்ட கருத்துகள் உள்ளவை. என். ராம் ஆசிரியரானதும் ராணுவம், பொருளாதாரக் கொள்கைகளில் ‘தி இந்து’ நாளிதழ் இடதுசாரி சிந்தனைக்கு அணுக்கமாகச் சென்றது, நாங்கள் வலதுசாரி கொள்கைகளுக்கு அணுக்கமாக இருந்தோம்.
இப்போது பிரச்சினைக்கு வருவோம். கடந்த வாரம் அதிகம் விவாதிக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ தொடர்பானதுதான் அதுவும். 2006 நவம்பர் மாதத்தில் எங்களுடைய முதன்மைப் புலனாய்வு நிருபர் ரீது சரின், முதல் பக்கத்திலேயே இடம்பெறும்படியான இரண்டு சிறு செய்திகளைத் தந்தார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜேந்தர் ஜெயினை பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியத்திலிருந்த சில நீதிபதிகளுக்கே தயக்கம் இருக்கிறது என்பதை அறிந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவரது பதவி உயர்வை ஆட்சேபித்தார். கலாம் ஒப்புதல் தர மறுத்த ஒவ்வொரு முறையும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வாலிடம் ஆலோசனை கலக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், கலாமை வற்புறுத்தினார். கலாமும் விடாப்பிடியாக இருந்தார். விஜேந்தர் ஜெயின் தொடர்பான கோப்பை மூன்றாவது முறையாக அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். தான் ஏன் இந்த நியமனத்தை ஏற்கவில்லை என்பதை விளக்கி 2 சிறு பாராக்களில் குறிப்பு எழுதி வைத்தார். இதை ஏற்காத கொலீஜியம் மேலும் ஒரு நீதிபதியைத் தேர்வுக் குழுவில் சேர்த்தது. குழுவில் இருந்த 3 மூத்த நீதிபதிகள் எதிர்க்கிறார்கள் என்பதால் தனக்கு ஆதரவாக மேலும் ஒருவரைச் சேர்த்துக் கொண்டார் தலைமை நீதிபதி. கொலீஜியம் பெரிதான செய்தியைத்தான் ரீது சரின் கொண்டு வந்திருந்தார்.
ரீது சரினிடமிருந்து ‘ஸ்கூப்’ செய்தி கிடைத்ததும் அதைப் பிரசுரிப்பது குறித்து விவாதித்தோம். பிரசுரிப்பது என்று தீர்மானித்துவிட்டோம். அப்போது கிடைத்த ஒரு தகவல் எங்களை அப்படியே உறைய வைத்துவிட்டது. அந்த ஆண்டு நீதிபதி விஜேந்தர் ஜெயின் தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, தில்லி மாநகரில் அனுமதி பெறாமலும், ஒப்புதல் பெற்ற கட்டிட அனுமதியை மீறியும் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தது. எங்களுடைய அலுவலகத்தின் இரு கட்டிடங்கள் குதுப் பகுதியில் இருந்தன. இந்த இடம் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டவை. இந்தக் கட்டிடங்கள் இருந்த நிலங்களை அறக்கட்டளை, தரும ஸ்தாபனங்களுக்கு அரசு தந்திருந்தது. அவர்கள் அவற்றைக் கொள்ளை விலைக்கு பிற நிறுவனங்களுக்கு விற்றுவிட்டனர், அனுமதித்ததற்கும் அதிகமான இடத்தில் கட்டிடம் கட்டினர் அல்லது அதிக வாடகைக்கு குத்தகைக்கு விட்டிருந்தனர். இந் நிலையில் நவம்பர் 18 பிற்பகல் எங்களுடைய அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள் கட்டிடத்துக்கு சீல் வைத்துவிட்டனர். நாங்கள் வீடற்றவர்களாகிவிட்டோம். எங்களிடம் இருந்த கலாமின் ஆட்சேப செய்தியை இனி வெளியிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எங்களுடைய அலுவலகம் பூட்டப்படக் காரணமாக இருந்த நீதிபதிக்கு எதிராக புலனாய்வுச் செய்தியை வெளியிட்டால், கட்டிடத்தைப் பூட்டி சீல் வைத்ததற்காக பழிவாங்கும் நோக்கில் செய்தியை வெளியிட்டார்கள் என்று பேசுவார்கள். நாங்கள் ஆலோசனை கலந்த மூத்த வழக்கறிஞர்கள் அனைவருமே, நீங்கள் பிரசுரிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அப்போது பெஞ்சமின் பிராட்லீயின் புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது.
உடனே சென்னையிலிருந்த என். ராமைத் தொடர்புகொண்டேன். ‘பென்டகன் பேப்பர்ஸ் தகவல்களை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பிரசுரிக்கக் கூடாது என்று நீதிபதி ஒருவர் உத்தரவிட்டதும் என்ன நடந்தது என்று நினைவிருக்கிறதா?’ என அவரிடம் கேட்டேன். அந்த ரகசியத் தகவல்கள் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைக்குத் தரப்பட்டு பிரசுரிக்கப்பட்டதை மின்னல் வேகத்தில் அவர் நினைவுகூர்ந்தார். நாங்களும் இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறோம் என்று எங்களுக்குக் கிடைத்த ஸ்கூப் செய்தியைத் தெரிவித்தேன். தில்லியில் மணிசங்கர் ஐயரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகிறேன், அங்கே பேசலாம் என்றார் ராம். ஐயரின் பங்களாவில் இருவரும் புல்வெளியில் தனியாக சந்தித்தோம். நான் அந்த ஸ்கூப் செய்தியை எடுத்து அவரிடம் கொடுத்தேன். போட்டி நிறைந்த பத்திரிகை உலகில் இப்படி ஒரு ரகசியத் தகவலை இன்னொரு போட்டி பத்திரிகைக்குக் கொடுப்பதை நம்பிக்கைத் துரோகமாகவே கருதுவார்கள். வெளியிடப்படாமல் அச் செய்தி மடிவதைவிட இப்படிப்பட்ட துரோகம் மேலானது என்ற முடிவிலே அதைச் செய்தோம். அடுத்த நாள் காலையில் ‘தி இந்து’ நாளிதழின் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக அது வெளியானது. அவர்களுடைய நிருபர், அந்த கொலீஜியத்தில் இருந்த மூத்த நீதிபதியிடம் பேசி மேலும் சில பயனுள்ள தகவல்களையும் அதில் சேர்த்திருந்தார். அதற்குப் பிறகும்கூட தலைமை நீதிபதி, விஜேந்தர் ஜெயினை பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தே தீர வேண்டும் என்றார். அந்த நியமனத்தைத் தடுப்பதல்ல எங்கள் நோக்கம். அந்த நியமனம் ஒருமனதானதல்ல, கொலீஜியத்துக்குள் நடப்பவை வெளியுலகுக்குத் தெரிவதே இல்லை, அதைத் தெரிவித்தால் நல்லது என்பதே எங்களுடைய நிலை.
நாங்கள் தந்த செய்தியைப் பிரசுரித்ததன் மூலம் ‘தி இந்து’ நிறுவனமும் ஆசிரியர் என். ராமும் தங்களுடைய பரந்த மனதை வெளிப்படுத்தினார்கள். இரு பத்திரிகைகளுக்குமே அங்கே உந்து சக்தியாகத் திகழ்ந்தது ‘பென்டகன் பேப்பர்ஸ்’ முன்னுதாரணம்தான்.
2007-ன் தொடக்கத்தில் ‘தைனிக் ஜாக்ரன்’ என்ற இந்திய செய்தித்தாள் நிறுவனம் அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வந்தது. அதன் முதல் முதலீட்டாளர், ‘ஐரிஷ் இன்டிபென்டென்ட்’ என்ற பத்திரிகையின் உரிமையாளர். அந்த முதலீட்டைக் குறிக்கும் வகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே இரண்டு முகங்கள் எனக்குப் பரிச்சயமானவையாக இருந்தன. ஒருவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த சீன் கானரி- ஐரிஷ்காரர். இரண்டாமவரைப் பார்த்து, ‘நீங்கள் பார்ப்பதற்கு பெஞ்சமின் பிராட் லீயைப் போலவே இருக்கிறீர்கள்’ என்றேன். ‘ ஆம் நான் பிராட் லீ தான்’ என்றார்.
அவரும் ஐரீஷ்காரர்தான். “பென்டகன் பேப்பர்ஸ் விவகாரத்தில் நீங்கள் செய்ததால் உந்தப்பட்டு நாங்களும் ஒரு செய்தியை அப்படி வெளிக்கொண்டுவந்தோம்” என்றேன். மகிழ்ச்சி அடைந்த அவர் அடுத்த நாள் காலையில் ‘நடந்துகொண்டே ஒரு பேட்டி’ நிகழ்ச்சிக்கு ஒப்புதல் தந்தார்.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
நீதிபதி விஜேந்தர் ஜெயின் தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியின் இணையதள முகவரி.
https://www.thehindu.com/todays-paper/A-controversial-judicial-appointment/article15728178.ece
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT