Published : 13 Oct 2023 04:12 PM
Last Updated : 13 Oct 2023 04:12 PM
புதுடெல்லி: சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் தாங்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் மனிதவளப் பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சீன நிறுவனங்கள் மூலம் பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் பிரபிர் புர்கயஸ்தாவும், அமித் சக்ரவர்த்தியும் கடந்த 3ம் தேதி சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து டெல்லி போலீஸின் கோரிக்கையை ஏற்று அவர்கள் இருவரிடமும் 7 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் தாங்கள் கைது செய்யப்பட்டதையும், 7 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்ததையும் எதிர்த்து அவர்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 7 நாள் போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து, இருவரையும் அடுத்த 10 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் அடைக்க கடந்த 10ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, நியூஸ் கிளிக் டெல்லி அலுவலகத்துக்கு போலீஸார் சீல் வைத்தனர்.
பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி இருவர் மீதும் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அளிக்கையில், சீனாவில் இருந்து அதிக அளவிலான நிதி இவர்களின் நிறுவனத்துக்கு வந்ததாகவும், அது இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தியா மீதான பற்றுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டை இருவரும் நிராகரித்தனர். இது தவறான குற்றச்சாட்டு என்றும் மோசடியானது என்றும் சீனாவிடம் இருந்து ஒரு பைசா கூட பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இருவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரபிர் புர்கயஸ்தாவையும் அமித் சக்ரவர்த்தியையும் கைது செய்தது சட்டத்தின் முன் நிற்காது. இருவர் தரப்பிலும் வழக்கறிஞர்கள் இல்லாத நிலையில் அவசர அவசரமாக அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது என வாதிட்டார்.
டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர்கள் இருவர் மீதும் உள்ள குற்றச்சாட்டு என்பது மிகவும் அபாயகரமானது. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் நோக்கில் சீனவைச் சேர்ந்த நபர் ஒருவர் மூலம் ரூ. 75 கோடியை இவர்கள் பெற்றிருக்கிறார்கள் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி துஷார் ராவ் கெடிலா, இரண்டு மனுக்களும் விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT