Published : 13 Oct 2023 05:59 AM
Last Updated : 13 Oct 2023 05:59 AM

உத்தராகண்டில் சிவன் - பார்வதி கோயிலில் வழிபாடு: ரூ.4,200 கோடி திட்டங்களை தொடங்கினார் பிரதமர் மோடி

உத்தராகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டம், ஜியோலிங்காங் கிராமத்தில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபாடு நடத்தினார். அப்போது புனித கைலாஷ் மலையை நோக்கி அமர்ந்து அவர் தியானம் செய்தார்.

டேராடூன்: உத்தராகண்டில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் ரூ.4,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

உத்தராகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டம், ஜியோலிங்காங் கிராமத்தில் கைலாஷ் மலையில் சிவன்-பார்வதி கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து 50 கி.மீ. தொலைவில் புனித கைலாஷ் மலை உள்ளது. பித்தோராகரில் உள்ள சிவன்-பார்வதி கோயிலில் இருந்தே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள புனித கைலாஷ் மலையை தரிசிக்க முடியும்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜியோலிங்காங்கில் உள்ள சிவன்-பார்வதி கோயிலில் வழிபாடு நடத்தினார். உள்ளூர் பாரம்பரிய உடை அணிந்து, உடுக்கை அடித்து சிவன், பார்வதியை அவர் வழிபட்டார். பின்னர் அங்கு புனித கைலாஷ் மலையை நோக்கி அமர்ந்து தியானம் செய்தார். சுமார் 25 நிமிடங்கள் அவர் பூஜை, வழிபாடுகளை செய்தார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "ஆதி கைலாஷை தரிசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயற்கையின் மடியில் அமைந்துள்ள ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த இந்த இடத்திலிருந்து நாட்டின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டின் கைலாஷ் மலைக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

பின்னர் ஜியோலிங்காங்கில் இருந்து குன்ஞ் பகுதிக்கு பிரதமர்நரேந்திர மோடி சென்றார். அங்குள்ள ராணுவ முகாமில் வீரர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் கிராம மக்களை சந்தித்து உரையாடினார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜோகேஸ்வருக்கு சென்றார். அங்குள்ள சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

பின்னர் பித்தோராகர் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் ரூ.4,200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

அண்மையில் நடந்த ஆசியவிளையாட்டுப் போட்டியில் இந்தியா புதிய சாதனை படைத்திருக்கிறது. முதல்முறையாக இந்திய வீரர், வீராங்கனைகள் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் உள்ளனர்.

ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. இதற்காக இதுவரை ரூ.70,000 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் உத்தராகண்டை சேர்ந்த சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பலன் அடைந்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் முழுவதும் சாலை, ரயில் வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநில சுற்றுலா துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள ரூ.4,000 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு எல்லையில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எல்லையோர கிராமங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. உத்தராகண்ட் மாநில எல்லைப் பகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டும் ரூ.1,100 கோடி செலவிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x