Published : 13 Oct 2023 05:41 AM
Last Updated : 13 Oct 2023 05:41 AM
புதுடெல்லி: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நினைவு நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கிறது. பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அந்த நாணயத்தை அச்சிடுகிறது.
இந்நிலையில் ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாணயத்தை வடிவமைக்கும் பணி தற்போது நிதி அமைச்சகத்தால் நடைபெற்று வருகிறது.
நாணயத்தின் ஒருபுறத்தில் கருணாநிதியின் சிரித்த முகத்துடன், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024’ என ஆங்கிலத்திலும் இந்தியிலும் உள்ளது. மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தேச வடிவத்தில் தேவைப்படும் மாற்றங்களை மத்திய நிதியமைச்சகமே செய்யும். இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, நினைவு நாணயத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நினைவு நாணயம் பொதுப்புழக்கத்தில் விடப்படுமா அல்லது தனிப்பட்ட பயன்பாட்டுக்கா என்பது இன்னும் தெரியவில்லை.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இதுபோன்று நினைவு நாணயம் வெளியிடப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு முன்னாள் முதல்வர்களான கே.காமராஜ், அண்ணா துரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நினைவு நாணயம் வெளியிடும் முறை கடந்த 1964-ல் தொடங்கியது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக முதல் நினைவு நாணயம் வெளியானது. இதைத்தொடர்ந்து முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமின்றி முக்கிய நிகழ்வுகளுக்கும் நினைவு நாணயம் வெளியானது. இவற்றில் சில பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. பல நாணயங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என்றானது.
தனிப்பட்ட பயன்பாட்டுக்கான நினைவு நாணயங்கள் அவை வெளியிடப்படும் மதிப்பை விட அதிகம். இவை ஒரு காசு முதல் ரூ.1,000 வரையிலான மதிப்பில் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நினைவு நாணயமும் குறிப்பிட்ட அளவு, எடை, உலோகம், காசின் மதிப்பு, உருவம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த நினைவுக் காசுக்கான தொகையை அச்சிடக் கோருவோர் செலுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT