Published : 12 Oct 2023 10:53 AM
Last Updated : 12 Oct 2023 10:53 AM

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்து வர 'ஆபரேஷன் அஜய்' திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் | கோப்புப் படம்

புதுடெல்லி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதறகாக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேலில் இருந்து திரும்ப விரும்பும் நமது குடிமக்கள் திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்குகிறோம். சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கான முயற்சி இது என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளவர்களுக்கு இமெயில் மூலம் பதில் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கான சிறப்பு விமானம் இன்று( வியாழக்கிழமை) இந்தியாவுக்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சிறப்பு விமானத்தில் செல்ல இடம் கிடைக்காதவர்கள் அடுத்தடுத்து இயக்கப்படும் விமானங்களில் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்தது. இதனால், அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அங்குள்ள இந்தியர்கள் இன்று முதல் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட உள்ளார்கள்.

இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் சுமார் 900 இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதோடு, மிகப் பெரிய எண்ணிக்கையில் வர்த்தகர்கள், தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர் இஸ்ரேலில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x