Published : 12 Oct 2023 08:08 AM
Last Updated : 12 Oct 2023 08:08 AM
புதுடெல்லி: பிரதமர் மோடி பயணத்தை சீர்குலைக்க நடந்த சதி தொடர்பாக தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் நேற்று பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த அமைப்பினரின் பேச்சுகளை கேட்டு சிலர் இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி பிஹார் பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் பயணத்தை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள புலவாரி ஷெரீப் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உட்பட 6 மாநிலங்களில் பிஎஃப்ஐ தொடர்புடைய பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் உள்ள அப்துல் வாஹித் ஷேக் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற ரயில் வெடிகுண்டு வழக்கில் அப்துல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ராஜஸ்தானில் உள்ள டோங், கோட்டா, கங்காபூர் போன்ற இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். டெல்லியில் உள்ள ஹாஸ் காஜி, பல்லிமாரன் போன்ற பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைகளின் போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் விசாரணை: இந்த வழக்கு தொடர்பாக மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தமுகமது தாஜுதீன் கமித் என்பவரது வீட்டுக்கு நேற்று காலை என்ஐஏ அதிகாரிகள் சென்றனர்.
தாஜுதீனிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பிறகு, அவரிடமிருந்த செல்போனை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிஹார் செல்லவில்லை: இதுகுறித்து தாஜுதீன் கூறும்போது, "நான் பிஹார் மாநிலத்துக்கே சென்றதில்லை. இந்நிலையில், பிரதமரின் பிஹார் பயணம் தொடர்பாக என்னிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர்’’ என்றார்.பின்னர் அவரை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது "முகமது தாஜுதீன், இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரிக்கிறோம். வேறெந்த உள்நோக்கமும் இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT