Last Updated : 12 Oct, 2023 08:24 AM

3  

Published : 12 Oct 2023 08:24 AM
Last Updated : 12 Oct 2023 08:24 AM

காசி, அயோத்தி கோயில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அறக்கட்டளை அளித்த பரிந்துரையை ஏற்கிறது உ.பி. அரசு

கோப்புப்படம்

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலின் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரியில் இக்கோயில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பலன் வரும் மக்களவைத் தேர்தலில் தமக்கு கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது. இதற்கு கோயில் ஊழியர்கள் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பது பாஜகவின் எண்ணமாக உள்ளது.

இச்சூழலில் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்க, அக்கோயிலை கட்டிவரும் ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை, உ.பி. அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கோயில் தலைமை அர்ச்சகரின் மாத சம்பளம் ரூ.25,000 ஆக உள்ளது. இது ரூ.32,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்குமுன் ரூ.15,520 என்றிருந்த அவர்களது மாத சம்பளம் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களில் அவர்களுக்கான ஊதியம் இரண்டு மடங்கு உயர்கிறது.

இதுபோல் உதவி அர்ச்சகர்களுக்கு கடந்த ஏப்ரலில் ரூ.20,000என்றிருந்த சம்பளம் ரூ.31,960ஆகவும், இதர உதவியாளர்களுக்கு ரூ.8,940 என்றிருந்த ஊதியம் இனி ரூ.24,440 ஆகவும்உயர்த்தி தரப்படும். ராமர்கோயிலின் மற்ற பணியாளர்களுக்கும் இதேபோல் ஊதிய உயர்வு கிடைக்கும்.

வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும் இதுபோல் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.

இதற்காக 16 பேர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில் அனைவரது சம்பளம், இதர படிகள் மற்றும் சலுகைகளை உயர்த்தலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து இதன்படி சம்பள உயர்வு அளிக்கலாம் என உ.பி. அரசுக்கு காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையையும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

மக்களவை தேர்தல்: வாரணாசி அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரமும் இதர பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரையும் சம்பளம் கிடைக்கிறது. ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது. இக்கோயிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர். இக்கோயிலில் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் அளிக்கப்பட உள்ளது.

உ.பி. அரசின் இந்த முடிவுக்கு எதிர்வரும் மக்களவைத் தேர்தல் காரணமாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x