Published : 11 Oct 2023 04:58 AM
Last Updated : 11 Oct 2023 04:58 AM

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு பினராயி விஜயன் கடிதம்

கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பினராயி விஜயன் தனது கடிதத்தில், “இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் சுமார் 7,000 பேர் கேரளத்தை சேர்ந்தவர்கள். அங்கு போர் நீடிப்பதால் இவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கேரளாவில் உள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். எனவே நீங்கள் இயன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு, இஸ்ரேலில் உள்ள நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் தாக்குதலில் காயம் அடைந்தார். இதையடுத்து இஸ்ரேலில் சிக்கியுள்ள கேரள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் பரவலான ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதன் அடிப்படையில் இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகளை ஜனநாயக முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இருதரப்பு தீர்வுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்களை பலியாக்கும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்து, அமைதியை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x